தற்போது நாளாந்தம் 700 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை மேலும் குறைவடையச் செய்ய வேண்டும் - விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே - News View

Breaking

Wednesday, October 20, 2021

தற்போது நாளாந்தம் 700 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை மேலும் குறைவடையச் செய்ய வேண்டும் - விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது கொவிட் பரவல் நிலைமை குறைவடைந்துள்ள போதிலும், தற்போது நாளாந்தம் 700 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை மேலும் குறைவடையச் செய்ய வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதான விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 4,000 வரை அதிகரித்து காணப்பட்டது.

எனினும் தற்போது அந்த எண்ணிக்கை 700 வரை குறைவடைந்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையும் மேலும் குறைக்கப்பட வேண்டும். அதற்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதோடு, சுகாதார விதிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

உலக நாடுகளில் சிறந்த தடுப்பூசி வழங்கும் சேவை முன்னெடுக்கப்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 10 - 15 ஆவது இடங்களுக்குள் உள்ளடங்குகிறது.

நாட்டின் முழு சனத் தொகையில் 67.4 சதவீதமானோருக்கு முதற்கட்டமாகவும், 58.3 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்டமாகவும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு 18 - 19 வயதுக்கு இடைப்பட்ட வயதுகளையுடையவர்களில் கொழும்பில் 10,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஏனைய மாவட்டங்களிலும் இந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment