பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர், அதிபர்களின் நவம்பர் மாத கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் : பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கம் தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது - வடமேல் மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர், அதிபர்களின் நவம்பர் மாத கொடுப்பனவு இடைநிறுத்தப்படும் : பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கம் தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது - வடமேல் மாகாண ஆளுநர்

(இராஜதுரை ஹஷான்)


நாளையும், நாளை மறுதினமும் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத கொடுப்பனவு இடைநிறுத்தப்படும். ஆளுநர் என்ற ரீதியில் கல்வி அமைச்சரின் அதிகாரத்தை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவேன் என வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்தார்.

நாளை பாடசாலைக்கு வருகை தராமல் எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர், அதிபர்களை பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினை, ஆசிரியர் சேவையை ஒன்றினைந்த சேவையாக்குதல் உள்ளிட்ட காரணிகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் சுமார் மூன்று மாத காலமாக நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியவது அவசியம். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சு முன்வைத்த அனைத்து தீர்வு திட்டங்களையும் தொழிற்சங்கத்தினர் புறக்கணித்துள்ளனர்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக சம்பளத்தை இரு கட்டமாக அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் முன்வைத்த கோரிக்கைகளையும் தொழிற்சங்கத்தினர் புறக்கணித்துள்ளனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கம் தொழிற்சங்கத்தினருக்கு கிடையாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நிலை ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தின் ஊடாக தீவிரமடைந்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர்கள். நாளையும், நாளை மறுதினமும் பாடசாலைக்கு சமூகமளிக்காமல், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாடசாலைக்கு வருகை தருவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கட்டுப்படும் பொறுப்பு அரச அதிகாரிகளுக்கு உண்டு. ஆகவே பாடசாலைக்கு சமூகமளிக்காத வடமேல் மாகாண ஆசிரியர், அதிபர்களின் நவம்பர் மாத கொடுப்பனவு இடைநிறுத்தப்படும். ஆளுநர் என்ற ரீதியில் கல்வி அமைச்சரின் அதிகாரங்களை செயற்படுத்தும் அதிகாரம் தனக்கு உண்டு.

நாளை பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்.மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும்.

ஆசிரியர், அதிபர்கள் சற்று விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்.நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, ஏனைய பிரச்சினைகள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடமைக்கு ஈடுபட்டதன் பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment