அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வலுவிழந்துள்ளது - சந்திம வீரக்கொடி - News View

Breaking

Wednesday, October 20, 2021

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வலுவிழந்துள்ளது - சந்திம வீரக்கொடி

(இராஜதுரை ஹஷான்)


அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வலுவிழந்துள்ளது. தவறான தீர்மானம் விவசாயத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரசாயன உரம், கிருமிநாசினிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் தேயிலை பயிர்ச் செய்கைக்காக மாத்திரம் இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தீர்மானங்களை அரசாங்கம் அறியாத நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் மீதும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நொடிப்பொழுதில் மாற்றி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உர பிரச்சினையினால் வீதிக்கிறங்கி போராடும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

தவறான தீர்மானம் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சேதன பசளை மாத்திரம் பயன்படுத்த முடியும் என்று உறுதிப்படுத்தும் வர்த்தமானி அமுலில் உள்ள போது இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

தேயிலை பயிர்ச் செய்கைக்கு தேவையான இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானத்தை அரசாங்கம் அறியாத நிலை காணப்படுகிறது. சேதன பசளை உரம் திட்டம் தோல்வியடைந்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் நினைத்தால் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய முடியும். ஆனால் அரசாங்கம் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. தரமான இரசாயன உர பயன்பாட்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தோற்றம் பெற்றுள்ள உரப் பிரச்சினையின் காரணமாக இம்முறை பெரும்போகத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது, விளைச்சல் குறைவானால் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலை அதிகரிக்கப்படும் .இதன் பாதிப்பு நடுத்தர மக்களை சென்றடையும் என்றார்.

No comments:

Post a Comment