இலங்கை மத்திய வங்கியின் 6 மாத கால செயற்திட்டம் இதே ! எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

இலங்கை மத்திய வங்கியின் 6 மாத கால செயற்திட்டம் இதே ! எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள் !

(நா.தனுஜா)

தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் மாற்றமில்லை

வாகன மீள்கையகப்படுத்தலை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தல்

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இறக்குமதியை மேம்படுத்தல்

பொருட்களின் விலைகளை நிலையான மட்டத்தில் பேணுதல்

நாட்டின் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 6 மாத காலத்திற்கான செயற்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் வெளியிடப்பட்டது.

அச்செயற்திட்டத்தில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரதான துறைகள் மற்றும் கட்டமைப்புக்களின் ஊடாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் 6 மாதகாலத்தில் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் குறுங்கால இலக்குகள் பட்டியல்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை, நடுத்தர - நீண்ட கால அடிப்படையில் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் பொருளாதார அடைவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி எதிர்வரும் 6 மாதகாலத்திற்குள் மிக முக்கியமாகப் பின்வருவனவற்றை அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் இறை உறுதிப்பாட்டை அடைந்து கொள்ளல்

உரிய நேரத்தில் படு கடன் பணிக் கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தல்

சந்தையில் வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையை அதிகரித்தல்

கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து அனைத்துத் தொழில் முயற்சிகளும் மீட்சியடைவதற்கு ஏற்றவாறான கட்டமைப்பை உருவாக்குதல்

படு கடன் அல்லாத உட்பாய்ச்சல்களை பரிசீலித்து, வெளிநாட்டுப் படுகடன் தோற்றப்பாட்டை மேம்படுத்துதல்

பொருளாதாரத்தின் விரைவான மீட்சியை ஊக்குவித்தல்

நாட்டிற்கான தரமிடல்களையும் வியாபார இயலுமைக் குறிகாட்டிகளையும் மேம்படுத்தல்

உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

தாழ்ந்த பணவீக்க நிலையில் உயர்வான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

துறைமுக நகரம் மற்றும் கைத்தொழில் வலயத்தின் செயற்பாடுகள் ஊடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் உட்பாய்ச்சலை அதிகரித்தல்

துறைமுக நகரத்திற்குள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கு துறைமுக நகர ஆணைக்குழு துணைச் சட்டத்தைத் தயாரித்தல்

விரிவான நிதியீட்டல் உபாயங்களுடன் வியாபாரத்திற்குச் சாதகமான வரவு,செலவுத் திட்டத்தை அறிவித்தல்

சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் நாட்டைத் தயார்ப்படுத்தல்

அரச பிணையங்களை மத்திய வங்கி கொள்வனவு செய்வதனைப் படிப்படியாக இலகுபடுத்தல்

உற்பத்தி மற்றும் சந்தை பன்முகப்படுத்தல் ஊடாக ஏற்றுமதி வியாபாரங்களை விரிவுபடுத்தல்

அவசர கடன்வழங்கல் வசதிக்கட்டமைப்பினை உருவாக்குதல்

நாட்டின் ஒட்டு மொத்த பணத் தூயதாக்கலுக்கு எதிரானதும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான இணக்கத்தை சர்வதேச தரத்திற்கு அமைவாக மேம்படுத்தல்

வெளிநாட்டு செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களைக் கண்காணிப்பதற்காக பன்னாட்டுக் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடும் முறைமையினை 2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நிறுவுதல்

அதேவேளை புதுப்பிக்கத்தக்க சக்தி வலு செயற்திட்டம், காலநிலை மாற்றத்தை சீராகக் கையாள்வதற்கான செயற்திட்டம், சூழலுக்கு நேயமான வேளாண்மை, சூழலுக்கு நேயமான வாகனங்களைக் கொள்வனவு செய்தல், நீர் வழங்கல் செயற்திட்டம், பசுமைச் செயற்திட்டம், கழிவு முகாமைத்துவ செய்திட்டம் ஆகிய முயற்சிகளுக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகளை ஊக்குவிப்பதாகவும் மத்திய வங்கியின் 6 மாத காலத்திற்கான செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் (வதிவுள்ளோர்/வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள்) எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என்பதுடன் அவை தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள வசதிகளையும் சலுகைகளையும் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுச் செலாவணி மீளனுப்பப்படாததும் மாற்றப்படாததுமான ஏற்றுமதியாளர்களின் இலாபங்களின் மீது 14 சதவீதமாகவன்றி 28 சதவீதமாக வரி அறவிடுமாறு அரசாங்கத்தைக் கோருதல்

இலகுவான வரிக் கட்டமைப்புடைய 'முதலீட்டாளர்களுக்குச் சாதகமான' வரவு,செலவுத் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தல்

கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட - லீசிங் அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களிடமிருந்து நீதிமன்றக் கட்டளையின்றி வாகனங்களை மீளக்கையகப்படுத்துவதை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துதல்

எரிபொருள் மற்றும் ஏனைய அவசியமான இறக்குமதி வசதிகளை மேம்படுத்தி இடைவிடாத பொருள் நிரம்பலை உறுதி செய்தல்

பொருட்களின் விலைகளை நிலையான மட்டத்தில்பேணி, அதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு சுமையைக் குறைத்தல்

ஆகியவையும் மத்திய வங்கியின் 6 மாத கால செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாகும்.

No comments:

Post a Comment