(எம்.மனோசித்ரா)
பெற்றோலியத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்குமான வழிகள் குறித்து இலங்கை - இந்திய இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. டில்லியிலுள்ள பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சில் வெள்ளியன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஹர்தீப் சிங் பூரி பெற்றோலியம் மாத்திரமின்றி வீட்டு அபிவிருத்தி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர், சிறந்த தொழில்முறை இராஜதந்திரிகளில் ஒருவராக காணப்பட்டதோடு, 1984 - 1988 காலப்பகுதியில் இலங்கையிலும் பணியாற்றியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பெற்றோலியத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் , விரிவாக்குவதற்குமான வழிகள் உட்பட பல விடயங்கள் குறித்து அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடினர்.
இதன் போது உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கொள்கை வரைபு கூட்டுத்திட்டத்தை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment