அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை 02 இலட்சத்து 15,000 ஏக்கரில் : விதைப்பு பணிகள் ஒக்டோபர் 15 முதல் ஆரம்பம் - அக்கரைப்பற்றில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை 02 இலட்சத்து 15,000 ஏக்கரில் : விதைப்பு பணிகள் ஒக்டோபர் 15 முதல் ஆரம்பம் - அக்கரைப்பற்றில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 2021/202ம் ஆண்டுக்கான பெரும் போக நெற் செய்கைக்கான விதைப்புப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி ஆரம்பித்து நவம்பர் மாதம் 15ம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமென, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் 2021/2022ம் ஆண்டுக்கான பெரும் போக நெற் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் புதன்கிழமை (29) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

கல்லோயா வலது கரை வதிவிட திட்ட முகாமையாளர் எஸ்.எல்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் 02 இலட்சத்தி 15 ஆயிரம் ஏக்கரில் நெற் செய்கை பண்ணப்படவுள்ளதோடு, 10 ஆயிரத்தி 20 ஆயிரம் ஏக்கரில் கரும்புச் செய்கை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சேனநாயக்கா சமுத்திரத்தில் 01 இலட்சத்தி 90 ஆயிரம் ஏக்கர் சதுர அடி நீர் மட்டம் காணப்படுகின்ற போதிலும், மழையை நம்பி அனைத்துப் பிரதேசங்களிலும் நெற் செய்கையை மேற்கொள்ள முடியும்.

கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் 37 ஆயிரத்தி 100 ஏக்கரிலும், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவில் 24 ஆயிரத்தி 10 ஏக்கரில் நெற் செய்கை பண்ணப்படவுள்ளது. 

ஏனைய பிரதேசங்களில் 95 வீதம் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 100 வீதம் நெற்செய்கை பண்ண முடியும் என்றார்.

இம்முறை சேதனப் பசளையை பயன்படுத்தி நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் சேதனப் பசளை பாவனையை அம்பாறை மாவட்டத்தில் முற்றுமுழுதாக பாவிப்பதற்கு விவசாயிகள் முன்வர வேண்டுமென்றார்.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுஜித கமகே, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், பிரதேச செயலாளர்களான எம்.ரீ.ஏ. அன்சார் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளும், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment