பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவை சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவை சிகிச்சைகளுக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல போதைப் பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ எனப்படும் கம்பொல விதானகே சமந்த குமாரவை, வைத்திய சிகிச்சைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு வௌியில் அழைத்துச் செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா தலைமையிலான நீதிபதி தம்மிக கனேபொல அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த அனுமதியை வழங்கியது.

போதைப் பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை, விசாரணை எனும் பெயரில் வெளியே அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி வெலே சுதாவின் தாய் ஆர்.ஜி. மாலனி ரிட் மனுவொன்றினை மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

தற்போது பூசா சிறையில் உள்ள வெலே சுதாவை, மீள பொலிஸ் பொறுப்பில் எடுக்க தடை விதிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட கொஸ்கொட தாரக, ஊரு ஜுவா ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவங்களை முன் வைத்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

குறித்த மனுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பூசா சிறைச்சாலை அத்தியட்சர், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

குறித்த மனு கடந்த மே 14 ஆம் திகதி அவசர மனுவாக கருதி பரிசீலிக்கப்பட்டது. இதன்போது வெலே சுதாவை பூசா சிறைக்கு வெளியே அழைத்து செல்லக்கூடாது என பூசா சிறைச்சாலையின் அத்தியட்சருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்நிலையில் நேற்று இம்மனு நகர்த்தல் பத்திரம் ஊடாக மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வெலே சுதாவை பூசா சிறைக்கு வெளியே அழைத்து செல்லக்கூடாது என்ற நீதிமன்ற கட்டளை ஊடாக அவருக்கு சிகிச்சையளிப்பது தொடர்பிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார். எனவே அந்த உத்தரவு தொடர்பில் விளக்கம் ஒன்றினை பெற்றுத் தருமாறு மனுதாரர் கோரினார்.

இந்நிலையில் விடயத்தை ஆராய்ந்த நீதிமன்றம், ஏற்கனவே மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவானது, வெலேசுதாவை வைத்திய சிகிச்சைகளுக்காக அழைத்து செல்ல தடையாக அமையாது என விளக்கமளித்து வழக்கை ஒக்டோபர் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

No comments:

Post a Comment