(எம்.மனோசித்ரா)
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும் உலக சந்தையில் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சில தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர், கடந்த சில தினங்களாக உலக சந்தையில் ஏற்பட்ட நிலைமையால் குறித்தவொரு நிறுவனம் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரியது. எனினும் அரசாங்கம் அதற்கு அனுமதிக்காமையால் நுகர்வோர் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் விலை மற்றும் விநியோகம் உள்ளிட்ட விடயங்கள், டொலரின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் ஏதெனும் தீர்மானங்கள் எடுக்கப்படும். எவ்வாறிருப்பினும் தற்போது சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
விநியோகிப்பவர்கள் உரிய விலையில் உரியவாறு விநியோகிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கா விட்டால் நுகர்வோர் நெருக்கடிகளுக்கு உள்ளாவர். எனவே இந்த இரு விடயங்களையும் கவனத்திற் கொண்டு அரசாங்கம் நடுநிலையானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு முயற்சிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment