(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஆசிய ரக்பி எழுவர் போட்டித் தொடரில் (ஏஷியன் ரக்பி செவன்ஸ்) பங்கேற்கும் இலங்கை அணி விபரத்தை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் இப்போட்டித் தொடரில் இலங்கையால் பங்குகொள்ள முடியாது போகும். அது மாத்திரமல்லாது ‘ஏஷியன் ரக்பி செவன்ஸ்’ இல் சம்பியானாக்கூடிய அரிய வாய்ப்பும் இல்லாமல் போகும்.
ரக்பியில் ஆசிய வல்லரசாக திகழும் ஜப்பான் மற்றும் இரண்டாவது வலிமையான அணியாகவுள்ள ஹொங்கொங் ஆகிய இரண்டு அணிகளும் இம்முறை ‘ஏஷியன் ரக்பி செவன்ஸ்’ இல் பங்கேற்காது என தெரிய வருகிறது.
தேசிய ரக்பி வீரர்களை போட்டிக்கு தயார்படுத்துவது சிறந்த விடயமாகும். மாறாக அதனை செய்யத் தவறினால் இலங்கை சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு இல்லாமல் போகும்.
தேசிய ரக்பி வீரர்களை போட்டிக்கு தயார் செய்யத் தவறிய மோசமான நிர்வாகத்தால் இலங்கையின் வாய்ப்புகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், அவர்கள் இலங்கை அணியை ‘ஏஷியன் ரக்பி செவன்ஸ்’ தொடருக்கு அனுப்ப முடியாவிட்டால் அது மோசமாகிவிடுமென குறிப்பிடப்படுகிறது.
ரக்பி விளையாட்டானது உடல் வலிமையால் விளையாடப்படும் விளையாட்டாகும். இந்த விளையாட்டில் காயம், உபாதைகள் ஏற்படுவது போட்டியின் ஓர் அங்கமாகும்.
ஆகவே, ரக்பி குழாத்தில் 30 பேர் கொண்ட அணியை ரக்பி உயர் செயல்திறன் குழு தெரிவு செய்து கொடுத்துள்ள போதிலும், அதனை 15 பேராக மட்டுப்படுத்தி தரும்படி இலங்கை ரக்பி சம்மேளன நிர்வாகத்தினர் உயர் செயல்திறன் குழுவிடம் அவசர அவசரமாக கேட்டுள்ளமை முறையாகாது.
எவ்வாறாயினும்,இலங்கை ரக்பி சம்மேளனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களால், இலங்கை சம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.
ஆகவே, இலங்கையில் ரக்பி விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.
No comments:
Post a Comment