ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை : மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கற்பித்தலில் ஈடுபடுங்கள் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை : மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கற்பித்தலில் ஈடுபடுங்கள் - அமைச்சர் சரத் வீரசேகர

இராஜதுரை ஹஷான்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆசிரியர்களும், சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளின் ஆசிரியர்களும் மாணவர்களின் நலன்கருதி நிகழ்நிலை முறைமை ஊடான கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். தெற்கு மற்றும் ஏனைய மாகாண அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாய்மூல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆசிரியர்கள் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் என்மீது குற்றஞ்சாட்டியுள்ளார்கள். இது முற்றிலும் தவறானது.

போராட்டத்திற்கு மத்தியில் தாம் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என ஆசியர்களே குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்கள். இதற்கமையவே விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குறிப்பிடப்பட்ட ஆசிரியர்களே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும், அரசியல் நோக்கங்களும் கிடையாது. ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தாம் விருப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அழுத்தங்கள் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்று குறிப்பிடுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அதேபோல் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. தெற்கு மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும், ஏனைய மாகாண அரச பாடசாலைகளில் உள்ள மாணவர்களும் தான் இப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு மத்தியில் மாணவர்களுக்காக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாய்மூல அச்சுறுத்தல் விடுத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment