இராணு வீரர் ஒருவர் கிடைக்காததாலேயே அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார் : வரலாற்றில் ஒருபோதும் அரசியல்வாதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதில்லை - ஐக்கிய தேசிய கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 16, 2021

இராணு வீரர் ஒருவர் கிடைக்காததாலேயே அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார் : வரலாற்றில் ஒருபோதும் அரசியல்வாதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதில்லை - ஐக்கிய தேசிய கட்சி

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஓய்வு பெற்ற இராணு வீரர் ஒருவர் கிடைக்காததாலேயே அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். இதன் மூலம் அரசாங்கம் மத்திய வங்கியை அரசியல் மயமாக்கி இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

புத்தளம் பிரதேசத்தில் கட்சி காரியாலயத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அமைச்சுப் பதவி வகிப்பவர்களுக்கு தங்கள் அமைச்சுக்களில் தொடர்ந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று அரசாங்கத்தின் கொள்கை காரணமாக அரச அதிகாரிகளுக்கும் நிறுவனங்களில் சுதந்திரமாக பணிபுரிய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் அரச அதிகாரிகள் பதவிகளை இராஜினாமா செய்கின்றனர்.கொவிட் கட்டுப்படுத்தும் செயலணியில் இருந்து இதுவரை பல வைத்தியர்கள் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றனர்.

அத்துடன் நிறுவனங்களின் பிரதானிகளாக இருந்து அரச அதிகாரிகள் இராஜினாமா செய்து செல்லும்போது அந்த இடங்களுக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களே நியமிக்கப்படுகின்றார்கள். அந்த வகையில் தற்போது மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி.லக்ஷ்மன் இரண்டு வருடங்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தவர். தொடர்ந்து பணி புரிய முடியாமல் 10 மாதங்களில் ஓய்வு பெற்றுச் சென்றார்.

மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்க ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரை தேடிக் கொள்ள முடியாமலே அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

இலங்கை மத்திய வங்கி எப்போதும் சுயாதீன நிறுவனமாகவே இயங்கி வந்திருக்கின்றது. வரலாற்றில் ஒருபோதும் அரசியல்வாதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதில்லை. முதல் தடவையாக அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதன் மூலம் அரசாங்கம் மத்திய வங்கியை சுயாதீன தன்மையில் இருந்து நீக்கி, அரசியல் நிறுவனமாக மாற்றி இருக்கின்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் நம்பிக்கை இல்லாமல் போயிருக்கின்றது.

மேலும் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருந்த காலத்தில் நாட்டின் கையிருப்பு தொகையில் 4,5 பில்லியன் அளவில் அகற்றி இருப்பது, எமது அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வின் மூலம் தெரியவந்தது. அதன் காரணமாக பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது.

இது தொடர்பான அறிக்கை 2019 நவம்பர் மாதமே வெளிவந்தது. ஆனால் அறிக்கை தொடர்பில் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment