முஸ்லிம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற மர்ஹ_ம் அஷ்ரப் அவர்களின் எண்ணங்களை அமுல் படுத்த அணைவரும் எம்மோடு ஒன்றிணையுங்கள் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் இயக்கம் ஒன்று தேவை என்ற அடிப்படையிலேயே தலைவர் மர்ஹூம் அஷ்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தார். அவரது வாழ்வில் அதனை அவர் செய்தும் காட்டினார்.
எனவே நமக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த அவருக்காக சகல முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிலர் குறிப்பிடுவதை போல நினைவு தினத்தில் மாத்திரமன்றி எப்போதும் அவரை நினைவு கூர வேண்டும். பிரார்த்திக்க வேண்டும்.
கட்சியின் ஆரம்ப காலத்தில் அவர் முன் வைத்த விடயம் புத்தளம் பள்ளிவாயலில் 8 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விடயத்தைப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை என்பதாகும்.
இந்தக் குறையை நிவர்த்திப்பதற்கென்றே அவர் கட்சியைத் தோற்றுவித்தார். அதனைச் செய்தும் காட்டினார். காலப்போக்கில் சகல மக்களையும் ஒன்றிணைக்க நுஆ என்ற கட்சியையும் தோற்றுவித்தார்.
தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் அஷ்ரப் அவர்களின் உரிமைக் குரல் பற்றிய கொள்கை எதுவுமில்லை.
ஜனாஸாக்களை எரித்தால் என்ன? மத்ரசாக்களை மூடினால் என்ன? முஸ்லிம் சட்டத்தை ஒழித்தால் என்ன? காதி நீதிமன்றங்களை ஒழித்தால் என்ன? இவை போன்ற எந்த விடயங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் காங்கிரஸ்காரர் யாரும் பேசுவதில்லை.
முஸ்லிம்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் தலைவர் அஷ்ரப் அவர்களின் சிந்தனையை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் தான் செய்து வருகின்றோம் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிவர்.
எனவே தலைவர் அவர்களின் சகல சிந்தனைகளையும் செயல்படுத்த அனைவரும் எம்மோடு கைகோர்த்து வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றேன்.
No comments:
Post a Comment