(நா.தனுஜா)
இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்போதைய அரசாங்கம் அதனை சிறுபான்மையினரை மாத்திரம் மையப்படுத்திய பிரச்சினையாக வரையறுத்தது. ஆனால் தற்போது அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடியாது. ஏனெனில் 48 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விடயங்களில் 90 சதவீதமானவை சிவில் யுத்தத்துடன் தொடர்புடையவையல்ல. மாறாக அவை நாட்டின் நிகழ்கால மனித உரிமை நிலைவரங்களை மையப்படுத்தியவையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் (நேற்று) ஜனநாயகத்திற்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், அதன்போது ஆணையாளரினால் இலங்கை உள்ளடங்கலாக மனித உரிமைகள் மிக மோசமடைந்திருக்கும் நாடுகள் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கையைப் பொறுத்த வரையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வாய் மூல அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் இறந்த காலத்துடன் தொடர்புடையவை அல்ல. மாறாக நாட்டில் தற்போது இடம்பெறும் விடயங்கள் பலவும் அவரது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளின் சீர்குலைவு மற்றும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்போதைய அரசாங்கம் அதனை சிறுபான்மையினரை மாத்திரம் மையப்படுத்திய பிரச்சினையாக வரையறுத்தது.
அதுமாத்திரமன்றி 'தேசப்பற்று' தொடர்பில் பேசி, தெற்கில் வாழும் மக்களின் மனங்களில் அதற்கெதிரான நிலைப்பாடொன்றைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடியாது.
ஏனெனில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விடயங்களில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதமானவை சிவில் யுத்தத்துடன் தொடர்புடையவையல்ல. மாறாக அவை நாட்டின் நிகழ்கால நிலைவரங்களை மையப்படுத்தியவையாகும்.
எனவே எமது நாட்டின் பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலையீடு செய்ய வேண்டிய நிலையேற்பட்டிருப்பதென்பது எமது நாட்டிற்கு அகௌரவத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும்.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கைப் பிரஜைகள் இத்தாலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். எனவே எமது நாட்டில் மனித உரிமைகளும் ஜனநாயகமும் புறக்கணிக்கப்படுகின்றமையானது எமது நாட்டின் பிரஜைகள் சர்வதேசத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான பிரதான காரணமாகும்.
பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்யும் வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன ஸ்தாபிக்கப்பட்டன. அதேபோன்று ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாக இருந்தது.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், காணாமல் போனோரின் குடும்பத்தினர் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுதல் மற்றும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படல் குறித்தும் மேலும் பல்வேறு மனித உரிமை மீறல் அல்லது ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்தும் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இப்போது 'தேசப்பற்று' தொடர்பில்பேசி அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முடியாது.
அடுத்ததாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சரொருவர் ஹெலிகொப்டரில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அதுபற்றிக் கருத்து வெளியிடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அச்சம் கொள்ளும் சூழ்நிலையே காணப்படுகின்றது. இவற்றின் ஊடாக ஜனநாயகத்தின் மீதும் மக்களின் மீதும் அரசாங்கம் கொண்டிருக்கும் மதிப்பு எத்தகையது என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.
அதேவேளை நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதனைப் பாதுகாப்பதற்கான ஒரேயொரு சக்தியாக எதிரணி மாத்திரமே காணப்படுகின்றது. எதிரணிக்குள் எத்தகைய மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டாலும், ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற பொதுநோக்கத்தை ஈடேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment