நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை மக்களுக்கு வெளிப்படுத்தியமைக்கு நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன் - இராஜாங்க அமைச்சர் தயாசிறி - News View

Breaking

Tuesday, September 7, 2021

நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை மக்களுக்கு வெளிப்படுத்தியமைக்கு நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன் - இராஜாங்க அமைச்சர் தயாசிறி

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நாட்டுக்கு நிலையான வேலைத்திட்டம் இல்லை. நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை வெளிப்படுத்தி மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலமே இதனை மேற்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை மக்களுக்கு வெளிப்படுத்தியமை குறித்து நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

எந்த அரசாங்கமும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை. பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நடவடிக்கை எடுத்து வருந்திருக்கின்றன.

என்றாலும் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், 50, 60 வருடங்களாக எமது நாட்டுக்கு நிலையான பொருளாதார வேலைத்திட்டம் இல்லாமையாகும்.

நாட்டுக்கு பொருளாதார வேலைத்திட்டம் அமைப்பதற்கு நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை வெளிப்படுத்தி மக்களுடன் கலந்துரையாடுவதன் மூலமே இதனை மேற்கொள்ள முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, சம்பளம் அதிகரிப்பதென்றோ அல்லது வேறு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும் அதனை மேற்கொள்ள வேண்டியது நிதி அமைச்சராகும். நாட்டின் பொருளாதார நிலைமை நிதி அமைச்சருக்கே தெரியும்.

இதனை கருத்திற் கொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சில செலவுகளை, மோசடிகளை குறைத்து, கிராமங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேலைத்திட்டம் அமைத்து வருகின்றார் என்றார்.

No comments:

Post a Comment