சிறைக் கைதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுவதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஐ.நா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

சிறைக் கைதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுவதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஐ.நா தெரிவிப்பு

(நா.தனுஜா)

சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் எவ்வகையிலேனும் சிறைக் கைதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுவதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம், சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதனைக் கண்டனம் செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, 'சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'மண்டேலா விதிகளின்' பிரகாரம் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது.

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடைய புனர்வாழ்வளித்தல் செயற்பாடுகளின்போது, தடுக்காவலின் கீழ் இருப்பவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறைக் கைதிகள் முறையற்ற விதத்தில் நடாத்தப்படுவதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்' என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment