அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநரா ? பாராளுமன்ற உறுப்பினர் பதவி யோஷிதவுக்கா ? ஜயந்த கெடகொடவுக்கா ? - News View

Breaking

Tuesday, September 7, 2021

அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநரா ? பாராளுமன்ற உறுப்பினர் பதவி யோஷிதவுக்கா ? ஜயந்த கெடகொடவுக்கா ?

(இராஜதுரை ஹஷான்)

நிதி மூலதனச்சந்தை மற்றும் அரச முயற்சியான்மை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜாங்க அமைச்சு பதவியையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக கிடைக்கப் பெற்ற பாராளுமன்ற உறுப்புரிமையினையும் இராஜினாமா செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இவர் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதை தொடர்ந்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும். இவ்வெற்றிடத்திற்கு தற்போது இரு தரப்பினர்கள் உரிமை கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜயந்த கெடகொட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகைக்காக தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார்.

தற்போது நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தால் ஏற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவை மீண்டும் நியமிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மறுபுறம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக தற்போது சேவையாற்றும் பிரதமரின் மகனான யோஷித ராஜபக்ஷவிற்கு வெற்றிடமாகும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளமை அறிய முடிகிறது.

டப்ளியூ. டி. லக்ஷ்மன் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சராக அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் 12 ஆவது ஆளுநராக 2006 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி தொடக்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment