(நா.தனுஜா)
ஜனாதிபதி தற்போது புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார். ஆனால் எமது நாட்டு மக்களிடம் அவர் கடந்த காலத்தில் எத்தகைய கதைகளைக் கூறினார் ? மக்கள் மத்தியில் அவர் எமது நாட்டு மக்களுக்கு கூறுவதென்ன ? இவ்வாறு சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் அரசாங்கம் இரு வேறு கொள்கைகளையே கையாள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறுகோரி நேற்று உயர் நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றோம்.
நாடொன்றின் மத்திய வங்கியானது சுயாதீனமாக இயங்கக்கூடிய கட்டமைப்பாக இருக்க வேண்டும். மாறாக அக்கட்டமைப்பு அரசியல் மயப்படுத்தப்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
உலக நாடுகளைப் பொறுத்தமட்டில், அரசியல் மயமாக்கப்பட்ட மத்திய வங்கிகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமையினை அவதானிக்க முடியும்.
அரசாங்கத்தின் தனிப்பட்ட கொடுக்கல், வாங்கல்கள் மற்றும் நிதி ரீதியான தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் நோக்கிலேயே அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அவர் கடந்த 2005 டிசம்பர் மாதம் தொடக்கம் 2015 ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தார்.
ஆளுநராகப் பதவி வகிப்பவர் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாதகமான முறையில் செயற்படுவது முற்றிலும் தவறான விடயமாகும்.
இருப்பினும் பிணைமுறி மோசடி விவகாரத்தையடுத்து இந்திய நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வின்படி, பிணைமுறி விநியோகத்தில் அஜித் நிவாட் கப்ரால் அவரது உறவினர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி நாட்டிற்குப் பெருமளவான நட்டத்தை ஏற்படுத்திய ஹெஜின் உடன்படிக்கையும் அவராலேயே மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற ஒருவரையே தற்போது அரசாங்கம் அப்பதவிக்கென நியமித்திருக்கின்றது.
அடுத்ததாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாட்டை மீளத் திறப்பதாக இருந்தால், அதற்கு முன்னர் பொதுமக்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க வேண்டும்.
குறிப்பாக அதிபர், ஆசிரியர்களின் ஊதியக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறில்லா விட்டால் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் போராட்டங்கள் இடம்பெற்றால், புது வருடத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை ஒத்த நிலை மீண்டும் ஏற்படும்.
வேறெந்த நாடுகளிலும் இல்லாதவாறு எமது நாட்டில் சுமார் ஒன்றரை வருட காலமாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அரசாங்கம் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து இன்னமும் சிந்திக்கவேயில்லை.
ஜனாதிபதி தற்போது புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசுவதுடன் ஒன்றிணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் கூறுகின்றார். ஆனால் அவர் எமது நாட்டு மக்களுக்குக் கூறுவதென்ன? நாட்டில் இனவாதத்தை விதைத்து ஆட்சிபீடமேறியவர்கள், சர்வதேசத்திற்குச் சென்று வேறு கதைகளைக் கூறுகின்றார்கள். இவ்வாறு சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் அரசாங்கம் இரு வேறு கொள்கைகளையே கையாள்கின்றது.
அதேபோன்று மறுபுறம் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யமாட்டோம் என்று கூறி ஆட்சிபீடமேறியவர்கள் இப்போது அதற்கு முரணான விதத்திலேயே செயற்பட்டுவருகின்றனர்.
அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டவர்கள், இப்போது கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.
ஆகவே அரசாங்கம் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்கியிருப்பதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துகொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment