நாட்டை திறந்தால் மிக மோசமான இன்னொரு கொவிட் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் சுகாதார வைத்திய நிபுணர்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

நாட்டை திறந்தால் மிக மோசமான இன்னொரு கொவிட் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் சுகாதார வைத்திய நிபுணர்கள்

(ஆர்.யசி)

நாட்டை முழுமையாக திறக்கும் ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றே வேகமாக பரவிக் கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டை திறந்தால் மிக மோசமான இன்னொரு கொவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதுடன், பலவீனமான சுகாதார கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கை வைத்தியர்கள் சங்கக்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இது குறித்து தெரிவிக்கையில், நாடாக இன்னமும் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபடவில்லை, ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

ஒரு வாரத்தில் பத்தாயிரத்திற்கு அதிகமான வைரஸ் தொற்றாளர்களும், ஆயிரத்திற்கு அண்ணளவான அல்லது ஆயிரத்தையும் தாண்டிய வாராந்த கொவிட் மரணங்கள் இன்னமும் நாட்டில் பதிவாகிக் கொண்டுள்ளது.இது சாதாராண நிலைமை அல்ல.

நாம் இப்போது கட்டுப்பாடுகள் இல்லாது செயற்பட முடியும் என்றோ அல்லது நாடு தற்போது எச்சரிக்கை மட்டத்தில் இருந்து விடுபட்டுள்ளது என்றோ எம்மால் ஒருபோதும் கூறிவிட முடியாது.

நாம் இப்போதும் சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே உள்ளோம். வழமை போன்று நாம் மீண்டும் கட்டுப்பாடுகள் இல்லாது செயற்பட்டால், அல்லது டெல்டா வைரஸ் பரவலை பெரிதுபடுத்தாது செயற்பட்டால் மீண்டும் பாரிய தாக்கங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இன்னமும் நாட்டில் டெல்டா வைரசே பரவிக் கொண்டுள்ளது. அதேபோல் டெல்டா வைரஸ் திரிபுபடும் நிலைமை உள்ளதாக நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே நாடு இப்போது முழுமையாக திறக்கப்படக் கூடாது. அவ்வாறான தீர்மானங்கள் எடுப்பதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு செயலணி அதிகாரிகளும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும் சரியான தீர்மானம் எடுத்து கட்டுப்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதேனுமொரு சூழ்நிலையில் தென்னாபிரிக்க வைரசோ அல்லது வேறு ஏதேனும் புதிய வைரஸ் தொற்றுகளோ நாட்டில் பரவ ஆரம்பித்தல் இலங்கையின் நிலைமை மிக மோசமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment