நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அவசரகால சட்டத்தை கையாண்டு முழு அதிகாரத்தையும் கைப்பற்றவே ஜனாதிபதி நினைகின்றார் : அதிகார மோகம் மட்டுமே இவர்களின் எண்ணத்தில் உள்ளது - அனுரகுமார திசாநாயக்க - News View

Breaking

Monday, September 6, 2021

நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அவசரகால சட்டத்தை கையாண்டு முழு அதிகாரத்தையும் கைப்பற்றவே ஜனாதிபதி நினைகின்றார் : அதிகார மோகம் மட்டுமே இவர்களின் எண்ணத்தில் உள்ளது - அனுரகுமார திசாநாயக்க

(ஆர்.யசி,எம்.ஆ .எம்.வசீம்)

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் இருந்தும், 20 ஆம் திருத்ததினூடக நிறைவேற்று அதிகாரம் கிடைக்கப் பெற்றும், அதனையும் தாண்டி சகல சாதாரண சட்டங்களை மீறிய விதத்தில் செயற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே ஜனாதிபதி அவசரகால நிலைமையை நடைமுறைப்படுத்தியுள்ளார். இது ஜனநாயக அடக்குமுறையின் உச்சகட்டம் எனவே இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பிற்கு பிரதான காரணிகள் உள்ளன. நீண்ட கால பொருளாதார கொள்கை பிரதான காரணியாகும். அதேபோல் அண்மைக்கால பொருளாதார நெருக்கடி நிலைமைகள், அவ்வப்போது அரசாங்கம் எடுக்கும் கொள்கை ரீதியிலான தீர்மானம் ஆகியன இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணமாகியுள்ளது.

அதேபோல் ஒரு சிறிய வியாபார மாபியாக்காரர்களின் தலையீடு காரணமாகியுள்ளது. ஆனால் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியினாளும், அரசாங்கத்தினாளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

ஜனாதிபதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாம் பிரிவை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதனை அரசாங்கம் ஆமோதிக்கின்றது. அதற்கான நியாயத்தையும் முன்வைக்கின்றது.

வரலாற்றில் பல்வேறு சந்தப்பங்களில் அவசரகால சட்டம் நடைமுறையைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் சபையில் கூறுகின்றனர். ஆனால் வரலாறு முழுவதும் அவசரகால சட்டம் நடைமுறையைப்படுத்திய வேளையில் நாம் அதனை எதிர்த்தே வந்துள்ளோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை மீட்டுக்க அதற்கான நிருவாகத்தை உருவாக்க மூன்றில் இரண்டு அதிகாரம் வேண்டும் என கேட்டனர் அது கிடைத்தது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதாது இருபதாம் திருத்த சட்டம் மூலமாக உயரிய அதிகாரம் வேண்டும் என்றனர். அதனையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுத்தனர்.

நிறைவேற்று அதிகாரமும் போதாது அவசரகால சட்டமும் வேண்டும் என இப்போது கூறுகின்றனர். அதிகார மோகம் மட்டுமே இவர்களின் எண்ணத்தில் உள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால நிலைமைகளை கட்டுப்படுத்த அவசரகால சட்டம் வேண்டும் எனக்கூறி அதற்கு இடம் கொடுத்தால் அதனை சாதகமாக வைத்துக் கொண்டு சகல விடயங்களிலும் ஜனாதிபதி தலையிட நேரிடும்.

சகல சட்ட நீதி பொறிமுறைக்கு அப்பால் ஜனாதிபதி செயற்பட முடியும். அதற்கான அதிகாரத்தையே ஜனாதிபதி கேட்கின்றார்.

சாதாரண சட்டத்தை தாண்டிய விசேட சட்டங்களை கொண்டு பாராளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள சகல சட்டங்களையும் மீறிய விதத்தில் ஜனாதிபதி செயற்படவே நினைக்கின்றார். அப்படியென்றால் எதற்கு பாரளுமன்றம்?

நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அவசரகால சட்டத்தை கையாண்டு முழுமையாக அதிகாரத்தை கைப்பற்றவே ஜனாதிபதி நினைகின்றார். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment