உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்களை அரச சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்த முயற்சி : புலஸ்தினி, ஜெமீல் தொடர்பான மர்மங்கள் கலையப்படாமை ஏன் ? - நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் போத்தல ஜயந்த - News View

About Us

About Us

Breaking

Friday, September 24, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்களை அரச சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்த முயற்சி : புலஸ்தினி, ஜெமீல் தொடர்பான மர்மங்கள் கலையப்படாமை ஏன் ? - நியூயோர்க் ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் போத்தல ஜயந்த

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்கள் அரச சாட்சியாளர்களாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அமெரிக்காவில் வசிக்கும் ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தெரிவித்தார்.

அவ்வாறு குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டியவர்களை நீதிமன்றங்கள் முன் சாட்சியாளர்களாக நிறுத்தும் பட்சத்தில், நீதிமன்றங்களால் எவ்வாறு நியாயம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையின் விசாரணைகள் எந்தவகையிலும் திருப்தியடையும் வண்ணம் இல்லை என சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு நீதி கோரி, (22) நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப்பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச்சபைக் கூட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் தலைநகர் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் இரண்டாம் நாளான புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உலகத் தலைவர்கள் முன்நிலையில் உரையாற்றினார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் எனக் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஜனாதிபதி உரையாற்றிய அதே தினத்தில் ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள், பல்வேறு கோஷங்களையும் எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே போத்தல ஜயந்த மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.

கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, கை கால்கள் முறிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் போத்தல ஜயந்த குற்றுயிராய் மீட்கப்பட்ட பின்னர், உயிர் பாதுகப்பு கருதி அவர் அமெரிக்கா சென்று தற்போதும் அங்கு வசித்து வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 12 ஆண்டுகளாகியும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நியாயம் கோரி நியூயோர்க்கில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது, 'அரச அதிகாரி ஒருவர், தனது கடமைகளுடன் தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் தனது தொலைபேசி மற்றும் மடிக் கணினியிலிருந்து அழித்துள்ளார். அவ்வாறு அழிக்கப்பட்ட தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளுடன் தொடர்புடையது. இவ்வாறு தகவல்களை அவர் அழித்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அரச இரசாயன பகுப்பாய்வாளரே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு எனில் உளவுத் தகவல்கள் குறித்த, மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை அழித்த அந்த அரச அதிகாரியை நாம் சந்தேகிப்பது தவறா? அவரது நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?

இந்த தாக்குதல்களில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர் என நம்பப்படும் ஒருவரே கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி ராஜேந்ரன். அவர் உயிருடன் இருப்பதாகவும், இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. அப்படியானால் அவரை மீள இலங்கையிடம் ஒப்படைக்க எந்த கோரிக்கைகளையும் இலங்கை இதுவரை இந்தியாவிடம் விடுக்கவில்லை. அப்படியானால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து நாம் கேள்வி எழுப்பக் கூடாதா / அவ்வாரு கேள்வி எழுப்புவது தவறா?

அதே போல் இந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில், ஜெமீல் என்பவர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்யாது, அங்கிருந்து தெஹிவளைக்கு சென்று ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் குண்டை வெடிக்கச் செய்துள்ளார். தாஜ் சமுத்ராவிலிருந்து வெளியேரும் போது, ஜெமீலின் வீட்டுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் சென்று அவர் குறித்து தேடலாயினர். அப்படியானால் ஜெமீலுக்கும் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இருந்த தொடர்பு அல்லது உறவு என்ன? அது குறித்து கேள்வி எழுப்ப எம்மால் முடியாதா? அவ்வாறு கேள்வி எழுப்பக் கூடாதா?

இவ்வாறு கேள்வி எழுப்புபவர்கள், சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு விசாரிக்கபப்டுகின்றனர். அதுவல்ல நாம் கோருவது. இவ்வாறான மர்மங்களை கலைக்கும் விதமான விசாரணைகள் தேவை.

இலங்கையில் தற்போது இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது.

தனது தொலைபேசியிலிருந்த தகவல்களை அழித்த நிலந்த ஜயவர்தனவை அரச சாட்சியாக மன்றில் ஆஜர் செய்ய முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோன்று அரச உளவுச் சேவையின் பிரதானியாக அவர் இருந்த போது தாக்குதல் குறித்த தகவல்களை பொலிஸ் திணைக்களத்தின் மேலும் சிலருடனும் பகிர்ந்துள்ளார். அவ்வாறு தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்தமை தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 3 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இரு பொலிஸ் அத்தியட்சர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்க பரிந்துரைகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் வைத்துள்ளது. எனினும் தற்போது அவர்களையும் அரச சாட்சியாளர்களாகவே மன்றில் ஆஜர் செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

அப்படியானால் குற்றவாளிகள் அரச சாட்சியாளர்களாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டால் நீதிமன்றங்களால் என்ன செய்ய முடியும். நாம் நீதிமன்றங்களில் நியாயத்தை கோருகின்றோம். எனினும் குற்றவாளிகள் நீதிமன்றங்கள் முன் ஆஜர் செய்யப்படாமல் சாட்சியாளர்களாக மாற்றப்பட்டால் நீதிமன்றங்கள் என்ன செய்ய முடியும்? ' என ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment