தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைகள் இப்போது தலைகீழாக மாறியுள்ளன : ஏழை விவசாயிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தமக்கு நெருக்கமான முதலாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அக்கறை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைகள் இப்போது தலைகீழாக மாறியுள்ளன : ஏழை விவசாயிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தமக்கு நெருக்கமான முதலாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அக்கறை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

நா.தனுஜா

விவசாய மேம்பாடு தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைகள் இப்போது தலைகீழாக மாறியுள்ளன. ஏழை விவசாயிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தமக்கு நெருக்கமான முதலாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அரசாங்கம் அக்கறை செலுத்தியுள்ளது. தற்போது விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டின் பொருளாதாரமும் நாட்டு மக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், மேலும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடியவாறான தவறான தீர்மானங்களையே அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்கின்றது. அவ்வாறு தூரநோக்கு சிந்தனையின்றி அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் எமது நாட்டின் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தினால் உர இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது வெறுமனே அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததே தவிர நடைமுறைக்குப் பொருத்தமானதாக அமையவில்லை. இதன் விளைவாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள்.

உரப் பற்றாக்குறையினால் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருப்பதனால், விவசாயிகள் பலர் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை முற்றாகக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மரக்கறிகள், தேயிலை, இறப்பர், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்ச் செய்கைகளும் தற்போது பாதிப்படைந்திருக்கின்றன.

எனவே விவசாயிகளின் வருமான வீழ்ச்சி மற்றும் அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை முற்றாகக் கைவிட்டுச் செல்வது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் 'அரிசி மாஃபியாவை' முடிவிற்குக் கொண்டுவருவதாக தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து கூறி வருகின்றது. இருப்பினும் அதற்குரிய எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

உற்பத்தி இயலுமையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே விவசாயத்தை மையப்படுத்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். அதற்குத் தடையாகவுள்ள காரணிகளை இனங்கண்டு, உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேபோன்று விவசாய உற்பத்திகளுக்கான நியாயமான கொடுப்பனவை உறுதி செய்வதில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

விவசாய மேம்பாடு தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொள்கைகள் இப்போது தலைகீழாக மாறியுள்ளன. ஏழை விவசாயிகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தமக்கு நெருக்கமான முதலாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அரசாங்கம் அக்கறை செலுத்தியுள்ளது.

எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை விடுத்து, விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment