இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசம் - ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசம் - ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்

நா.தனுஜா

இலங்கையில் கடந்த 18 மாத காலத்தில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசமான சரிவைச் சந்தித்திருக்கும் அதேவேளை, உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள் நிகழாமையை உறுதி செய்தல் என்பன தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியோலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிக மோசமான சரிவைச் சந்தித்திருக்கின்றது. அத்தோடு உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பொறுப்புக் கூறல், நினைவு கூரல் மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறிப்பிடத்தக்களவிலான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருப்பதாகவும் சல்வியோலி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழாம் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சீரான தொடர்பைப் பேணி வந்திருப்பதுடன் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவ்வப்போது விளக்கமளித்துமிருக்கின்றது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கு 46/1 தீர்மானத்தின் கீழ் பரிந்துரை செய்யப்படக் கூடிய எந்தவொரு வெளியகப் பொறிமுறைகளையும் இலங்கை நிராகரிக்கின்றது என்றும் இலங்கையின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும் 'கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது. எனவே அடக்குமுறைகள் அல்லது நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எந்தவொரு தரப்பினரும் முன்வந்து முறைப்பாடளிப்பதற்குரிய வாய்ப்பு காணப்படுகின்றது' என்றும் பிரதிநிதிகள் குழு சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment