பல்வேறு சர்ச்சைகளை தேற்றுவித்துள்ள இலங்கை சுற்றுலாச் சபையின் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

பல்வேறு சர்ச்சைகளை தேற்றுவித்துள்ள இலங்கை சுற்றுலாச் சபையின் கடிதம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் இன்னமும் குறைவடையாத நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதாரப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறுக் கோரி இலங்கை சுற்றுலாச் சபையின் தலைவரினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இலங்கை சுற்றுலாச் சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோவினால் கடந்த 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நேற்று முன்தினம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததுடன், அக்கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு இலங்கை சுற்றுலாச் சபையை வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறிய அக்கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு, நானும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரும் தற்போது ரஷ்யாவில் இருக்கின்றோம்.

நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கின்றோம்.

இங்கு ஊடகங்களையும் முக்கியஸ்தர்கள் பலரையும் சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் பயண முகவரகங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் மொஸ்கோவில் நடைபெற்ற சுற்றுலா வர்த்தகக் கண்காட்சியிலும் கலந்து கொண்டோம்.

ரஷ்யா சுமார் 144 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சனத் தொகையைக் கொண்டிருப்பதுடன் இலங்கைக்கு முக்கிய சந்தை வாய்ப்பை வழங்குகின்ற நாடாகவும் விளங்குகின்றது.

அத்தோடு அதன் சனத் தொகையில் சுமார் 25 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குக் கீழ்வரும் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது.

அதன்படி பி.பி.ஈ அங்கியைக் கட்டாயமாக அணியும் அவசியத்திலிருந்து முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட விமானப் பணியாளர்களுக்கு விலக்களித்தல்.

விமானப் பயணத்திற்கு 72 மணித்தியாலத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விலக்களித்தல்.

12 வயதிற்குக் குறைந்த சிறுவர்களுக்கான கட்டாய பி.சி.ஆர் பரிசோதனையை இரத்துச் செய்தல்.

முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதுடன் விமான நிலையத்தில் அதற்கான வசதிகளைத் கட்டமைத்தல்.

ஆகிய விடயங்கள் தொடர்பில் உங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றோம் என்று அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் குறித்து இலங்கை சுற்றுலாச் சபையினால் உத்தியோகபூர்வமாக விளக்கமளிக்கப்படாத நிலையில், ஊடகவியலாளரொருவர் அவரது பேஸ்புக் பக்கத்தின் பின்னூட்டல் பகுதியின் ஊடாக சுற்றுலாச் சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோவிடம் இது பற்றிக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இருப்பினும் எதனடிப்படையில் மேற்படி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன என்றோ அல்லது அதனாலேற்படக் கூடிய பாதிப்புக்களுக்குப் பொறுப்புக் கூறுவது யார் என்றோ உரியவாறு விளக்கமளிக்கத் தவறிய கிமார்லி பெர்னாண்டோ, ஏனைய நாடுகளில் மேற்குறிப்பிட்டவாறு சுகாதாரப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையை மாத்திரம் தனது பதிலில் மேற்கோள்காட்டியிருந்தார்.

குறிப்பாக எகிப்தில் விமானப் பயணத்திற்கு முன்னரும் பின்னரும் 12 வயதிற்குக் குறைந்த சிறுவர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை, பிரான்ஸில் விமானப் பயணங்களின்போது 11 வயதிற்குக் குறைந்த சிறுவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமில்லை, தான்சானியாவில் 10 வயதிற்குக் குறைந்த சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமில்லை என்ற உதாரணங்களை மாத்திரமே கிமார்லி பெர்னாண்டோ பதிலாக வழங்கினார்.

இது குறித்து கேட்டறிவதற்கு கிமார்லி பெர்னாண்டோவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முற்பட்டபோதிலும், அது பலனளிக்கவில்லை.

கேசரி

No comments:

Post a Comment