ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்த்து கொடுக்க இடமளிக்க மாட்டோம் - வே.ராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

ஒருபிடி மண்ணையேனும் வெளியாருக்கு தாரைவார்த்து கொடுக்க இடமளிக்க மாட்டோம் - வே.ராதாகிருஸ்ணன்

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பதினோயிரம் ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது எம் பெருந்தோட்ட சமூகத்தை அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து செயல்பாடு. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மீறி எவரும் உள்நுழைந்தால் அதன் விளைவு எரிமலை தாக்கத்தை விட பேரளவில் இருக்குமென மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸை ஒழிக்க நாடே ஒன்றுபட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் கொரோனாவையும் ஊரடங்கையும் சாதகப்படுத்தி பல விடயங்கள் தனியாருக்கும் வெளிநாடுகளுக்கும் தாரைவார்த்து கொடுக்க அரசாங்கம் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு அரசாங்கத்தோடு இணைந்துள்ள மலையக பிரதிநிதிகளும் முட்டு கொடுத்து வருவது கேவலம் மிகுந்த செயலாகும். 

கொஞ்சம் கொஞ்சமாக பெருந்தோட்ட மக்களை சிதைக்கும் இவ்வரசாங்கம் இன்று பெருந்தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்கி ஒட்டுமொத்த பெருந்தோட்டங்களையும் சமூகத்தையும் சுடுகாடாக்க முயற்சித்து வருவது வெளிப்படையாகவே இன்று தெரிந்துவிட்டது.

காடாகி கிடந்த நிலத்தை நாடாகியவர்கள் எம் சமூகத்தினர். அந்த நிலங்களை கூறுபோட்டு விற்கும் அரசாங்கத்தையும் அதற்கு முட்டு கொடுக்கும் அரசியல் தலைமைகளையும் ஒருபோதும் பொருப்பு மிகுந்த மலையக பிரதிநிதி என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

பால் உற்பத்தி என்ற போர்வையில் பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழுள்ள காணிகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்க அரசாங்கம் சூட்சுமமாக திட்டம் தீட்டி வருகின்றது. 

அதாவது நாவலப்பிட்டியவில் கலபொட தோட்டம், வட்டவளையில் மவுன்ட்ஜின் தோட்டம் போன்றவற்றில் 800 ஏக்கர் வழங்கப்பட உள்ளன. அதேபோல தெல்தோட்ட, கிறோட்வெலிநா, கஸ்தன்ன தோட்டம், கந்தலோயா தோட்டம் உட்பட பல தோட்டங்களில் காணி அபகரிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இது ஆரம்பமே நுனியிலே கிள்ளி எறியாவிட்டால் வேர் விட்டு பல பகுதிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு விடும். இதை ஆரம்பத்திலேயே சுட்டிகாட்டிய வேலுகுமார் எம்.பிக்கு எதிராக அரசாங்கத்துக்கு கொடி பிடிக்கும் பொறுப்பற்ற தலைமைகள் அறிக்கைகளை அள்ளி கொட்டினார்கள் இன்று அந்த முகங்களெல்லாம் ஒழிந்து விட்டன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மலையக பெருந்தோட்ட மக்களை சிறுத்தோட்ட உரிமையாளாராக்குவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆட்சி மாறினாலும் மக்கள் மீது உண்மையான கரிசனை இருந்திருந்தால் அத்திட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடும் கட்சிகள் மலையக பெருந்தோட்ட சமூக மக்களை சிறுத்தோட்ட உரிமையாளராக்கி இருக்கலாம். மாறாக மக்களை பலிகாடாக மாற்ற நினைக்கும் அரசாங்கத்துக்கு ஒத்து ஊதி கொண்டிருப்பது வெட்கக்கேடான விடயமே.

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் காணிகளை அபகரிக்க நினைக்கும் எவராக இருந்தாலும் பரவாயில்லை அதை மலையக மக்கள் முன்னணியோ அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணியோ பார்த்து கொண்டிருக்காது. 

எம் நிலத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்து செல்ல முட்பட்டாலும் பொருப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மலையக மக்கள் முன்னணியும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் தகுந்த நடவடிக்கை எடுக்குமென மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment