ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேசத்திடம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காகவே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்பது தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் ஊடாக தெளிவாகியுள்ளது. எனவேதான் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்திய புலம்பெயர் இலங்கையர்கள் தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ராஜபக்ஷ அராசாங்கம் இலங்கையை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுப்பதற்காகவே ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்பது தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் ஊடாக தெளிவாகிறது. சதித்திட்டத்தின் ஊடாகவே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைபற்றியது. முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கறுப்பு கொடி ஏந்திய புலம்பெயர் இலங்கையர்கள் தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேசத்தில் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
நாட்டின் மின் உற்பத்தி மற்றும் விநியோக உரிமையை பிற நாட்டிற்கு வழங்க இந்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பாரிய ஆபத்துக்களை தோற்றுவிக்கும். இரண்டு நாட்களுக்கு மாத்திரம் முழு நாட்டிலும் மின் தடை ஏற்படுத்தப்படுமானால் , புதிய குண்டுகள் அல்லது துப்பாக்கிகளை ஏந்தி வந்து தாக்குதல்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. காரணம் அதற்கு சம அளவிலான பாதிப்புக்களை இரு நாள் மின் தடையால் ஏற்படுத்த முடியும்.
தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் மின்சாரத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் ராஜபக்ஷாக்கள் மாத்திரம் அல்ல. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பங்காளி கட்சிகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே.
இவர்களால் அரங்கேற்றப்படுகின்ற நாடகங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது. தேசிய சொத்துக்களை ராஜபக்ஷாக்களிடமிருந்து பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றார்.

No comments:
Post a Comment