அஜித் நிவாட் கப்ரால் நாட்டு மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஆற்றுகின்ற முதலாவது உரையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன - News View

Breaking

Tuesday, September 14, 2021

அஜித் நிவாட் கப்ரால் நாட்டு மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஆற்றுகின்ற முதலாவது உரையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் - கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன

(நா.தனுஜா)

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத உத்தரவாதத் தொகையை அறவிடும் தீர்மானத்தை உடனடியாக நீக்கிக் கொள்வதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருப்பதாகவும் அஜித் நிவாட் கப்ரால் நாட்டு மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஆற்றுகின்ற முதலாவது உரையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கும் நிலையில், 'அட்வொகாடா' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதில் அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக் கொள்ளவிருக்கும் அஜித் நிவாட் கப்ராலுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நான் அவருடன் சுமார் 3 வருடங்கள் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். என்னைப் பொறுத்த வரையில் அவர் ஓர் சிறந்த நிர்வாகியாவார்.

அதேபோன்று அவர் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் செயலாற்றுகின்ற மனிதராவார். அதனால் அவர் அதிக ஆற்றலைக் கொண்டவர் என்பதை நான் அறிவேன்.

எனவே அவருக்கு இரண்டு அறிவுறுத்தல்களை வழங்குகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மனால் மேற்கொள்ளப்பட்ட இரு தீர்மானங்களை மாற்றியமைக்க வேண்டும்.

அமெரிக்க டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபா என்ற மட்டத்தில் பேணல் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீத உத்தரவாதத் தொகையை அறவிடல் என்பவையே அவ்விரு தீர்மானங்களாகும்.

ஏனெனில் ஏற்கனவே நாட்டிற்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்த பலர், அவற்றைப் பதுக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இறக்குமதி உத்தரவாதத் தொகை குறித்த அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் பெருமளவான வருமானத்தை உழைப்பதற்கு வாய்ப்பளிக்கும்.

எனவே பதவியேற்றுக் கொண்டவுடன் ஆற்றுகின்ற முதலாவது உரையிலேயே இவ்விரு தீர்மானங்களையும் நீக்கிக் கொள்வதாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், அவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் மத்திய வங்கியில் ஆளுநர் பதவியை வகிக்கவில்லை. மாறாக இலங்கை மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியிலேயே ஆளுநர் பதவியை வகிக்கின்றார் என்பதை மனதிலிருத்திச் செயற்பட வேண்டும்.

எனவே இலங்கை மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் அவர் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட வேண்டும், எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment