கொரோனா தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ள, முன்பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விசேட திட்டம் செயற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளார்.
அதற்கிணங்க, மாகாணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தி விசேட செயற்பாடுகளை உள்ளடக்கிய செயல்நூல் ஒன்றை அச்சிட்டு அதனை மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கிம் விநியோகிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் சுமார் 47,000 முன்பள்ளி மாணவர்கள் முறையான கல்வி இல்லாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலைமையானது 2022 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் சேர்கின்ற குழந்தைகள் அவ்வகுப்புக்கான தேர்ச்சி மட்டங்களை பெற்றுக் கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தலைவர் பிரதீப் தென்னகோன் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு செயல்நூலை அச்சிட்டு விநியோகிக்கும் பணியை ஆரம்பித்துள்ள அதேவேளை, முதலாவது செயல்நூலை ஆளுநருக்குக் கையளித்தனர்.
கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் இச்செயல்நூல் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(திருகோணமலை நிருபர்)
No comments:
Post a Comment