ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தபட்சம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்த அறைகளை மூடிக்கொண்டனர். மற்றவர்கள் அறை ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடினார்கள்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபரை தாக்கி காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர் மாணவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 19 பேர் காயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த பெர்ம் பல்கலைக்கழகம், தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,300 கி.மீ தூரத்தில் உள்ள உரால்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.
ரஷ்யாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில் நடந்த இரண்டாவது துப்பாக்கி சூடு இதுவாகும்.
பொதுவாக ரஷ்ய கல்வி நிறுவனங்களில் அதிக பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை வாங்குவதில் உள்ள சிரமம் காரணமாக, கல்வி நிலையங்களில் துப்பாக்கி சூடு நடப்பது அரிது. எனினும், வேட்டை துப்பாக்கிகளை பதிவு செய்ய முடியும் என்பதால் ஒரு சில இடங்களில் அசம்பாவிதம் நடக்கிறது.
No comments:
Post a Comment