ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நிறைவடையும் : வெளிநாடு செல்வோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்ற நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நிறைவடையும் : வெளிநாடு செல்வோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்ற நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஒக்டோபர் மாதத்திற்குள் 4 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லும் தேவையுடையோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அதனை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நிறைவடையுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பல கிராம சேவகர் பிரிவுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கிறோம். சினோபார்ம் தடுப்பூசிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டன.

சீனாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்திருந்தமையால் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

என்றாலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதால் தடுப்பூசி வழங்கும் பணிகள் மீண்டும் தாமதமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சினோபார்ம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு உரிய வகையில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்.

அதேபோன்று மாவட்ட மட்டத்தில் தரவுகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகள் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தரவுகளை பெற்றுக் கொடுப்பதில் காணப்பட்ட சில சிக்கல்கள் காரணமாகவும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

2012ஆம் ஆண்டு சனத் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம்தான் தரவுகள் சேகரிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது சனத் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் தரவுகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்திருந்தன. இக்குறைப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

இளையோருக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் வகைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவர்களுக்கு எந்தவொரு தடுப்பூசியையும் வழங்க முடியுமென உலகளாவிய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மாதத்திற்குள் 4 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லும் தேவையுடையோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அதனை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment