தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா)

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள குறித்த தொழிநுட்ப நிறுவனத்திற்கு தரவுகளை மீளப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது. இதற்கான விசேட நிபுணர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தரவுகளை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நாம் நம்புவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டிலிருந்தே தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அவை முறையாக பேணப்பட்டிருக்கவில்லை என்பது பெரும் குறைபாடாகும்.

அத்தோடு இந்த வேலைத்திட்டத்தை பொறுப்பேற்ற நிறுவனத்திற்கும் தரவுகளை மீள பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு காணப்படுகிறது. இதற்கான விசேட நிபுணர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தரவுகளை மீள பெற்றுக் கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம்.

அதுவரையில் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகளை எழுத்து மூலம் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொவிட் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தரவுகளை சேகரிப்பதற்கு வேறு முறைமைகள் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.

No comments:

Post a Comment