சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தென் ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறை அதிகாரி சிங்கபாகோ நச்மாலோ கூறுகையில், ‘‘சிறையில் நடக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை ஜேக்கப் ஜூமாவை மருத்துவமனையில் சேர்க்க தூண்டியது. சிறையில் முன்னாள் ஜனாதிபதியின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார சேவையின் ஈடுபாடு தேவைப்படுகிறது’’ என்றார்.
அதேவேளையில், ஜேக்கப் ஜூமா உடலில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவரின் தற்போதைய நிலை என்ன? என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment