இந்தியாவிலிருந்து ஒக்சிஜனை ஏற்றிய இரு கப்பல்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இலங்கையை வந்தடையும் - News View

About Us

About Us

Breaking

Friday, August 20, 2021

இந்தியாவிலிருந்து ஒக்சிஜனை ஏற்றிய இரு கப்பல்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இலங்கையை வந்தடையும்

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்தியாவிலிருந்து ஒட்சிசனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளன. 

சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ள 100 தொன் ஒட்சிசனுடன் இக்கப்பல்கள் இலங்கை கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடந்த 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பலும், இந்திய கடற்படையின் சக்தி கப்பலும் இவ்வாறு ஒட்சிசனுடன் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இலங்கையின் கடற்படைக்கு சொந்தமான கப்பலானது இன்று அதிகாலை சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

அத்துடன் ஒட்சிசனுடன் கூடிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி எனும் மற்றுமொரு கப்பல், விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 19 ஆம் திகதி இரவு கொழும்பை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இந்த கப்பல்கள் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக கடற்படையினர் கூறினர்.

இந்திய அரசாங்கத்திடம் முன்பதிவு செய்துள்ள ஒட்சிசனை அவசரமாக நாட்டிற்கு கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் நிசாந்த உலுகெதென்ன, இந்திய கடற்படைத் தளபதியிடம் விஷேட வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இலங்கை கடற்படையின் சக்தி கப்பலுக்கு மேலதிகமாக அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் ஒட்சிசனை ஏற்றி இலங்கைக்கு வருகை தருவதாக கடற்படை தெரிவித்தது.

தேவைக்கேற்ப இந்த சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் எனவும் கடற்படை தெரிவித்தது.

No comments:

Post a Comment