(இராஜதுரை ஹஷான்)
கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு விவகாரத்தில் அரசாங்கம் நாட்டு மக்களை மாத்திரமல்ல, உலக சுகாதார ஸ்தாபனத்தையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதையே வலுசக்தி அமைச்சர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் தினசரி அதிகரிக்கிறதே தவிர குறைவடையவில்லை. அரசாங்கமும் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.
நாட்டை ஒரு வார காலத்திற்கு முடக்கினால் தற்போதைய நெருக்கடியான நிலையை சிறிதேனும் கட்டுப்படுத்தலாம் என சுகாதார தரப்பினர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் அரசாங்கம் நாட்டை முடக்காமல், இரவில் மாத்திரம் பயனற்ற ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கட்டுப்பாடுகளை மாத்திரம் அமுல்படுத்துகிறது. இதனால் எவ்வித மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை.
தடுப்பூசி செலுத்தலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என உலக சுகாதார தாபனம் வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய ஆலோசனை வழிகாட்டலை முழுமையாக செயற்படுத்துவதாக அரசாங்கம் உலக சுகாதார ஸ்தானபத்திற்கு வாக்குறுதி வழங்கியது. வழங்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
60வயதிற்கு மேற்பட்டோர் கொவிட் தொற்றினால் அதிகளவில் மரணிக்கின்றனர். ஆரம்பத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கியிருந்தால் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும். மரணங்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு கூட எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிக்கிறங்கி போராடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
No comments:
Post a Comment