(எம்.மனோசித்ரா)
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்குவதில் கொவிட் நெருக்கடி நிலைமையால் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போதுள்ள பொருளாதார நிலைமைக்கு மத்தியில் எவ்வாறு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு நியாயத்தை வழங்குவது என்பது தொடர்பில் அரசாங்கம் துரித தீர்மானத்தை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இதுவரையில் 20 தொழிற்சங்கங்களுடன் 9 பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. இன்றும் (நேற்று) 9 தொழிற்சங்கங்களுடன் பிற்பகல் 02.00 மணி முதல் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள விவகாரத்தில் காணப்படுகின்ற முரண்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இதில் தகைமை அடிப்படையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்வித்துறை சார் சிற்றூழியர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களை விட அதிக சம்பளம் பெறுகின்றனர். அரச சேவையில் மிகவும் குறைந்த சம்பளத்தைப் பெறும் குழுவினராகவே ஆசிரியர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திலும் இது தொடர்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் கொவிட் நிலைமை காரணமாக இதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் தற்போதுள்ள பொருளாதார நிலைமைக்கு மத்தியில் எவ்வாறு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு நியாயத்தை வழங்குவது என்ற விடயத்தில் முழுமையாக பாடுபடுவோம் என்றார்.
No comments:
Post a Comment