எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பின்னணியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டம் : சம்பளம் போதாமை குறித்து போராட்டம் நடத்தும் கால நேரத்தை புரிந்து கொள்ளாதவர்களாக படித்த சமூகம் : நாடு இக்கட்டானதொரு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கையில் பொறுப்பற்ற செயலென சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 8, 2021

எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பின்னணியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டம் : சம்பளம் போதாமை குறித்து போராட்டம் நடத்தும் கால நேரத்தை புரிந்து கொள்ளாதவர்களாக படித்த சமூகம் : நாடு இக்கட்டானதொரு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கையில் பொறுப்பற்ற செயலென சுட்டிக்காட்டு

எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பின்னணியில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நாடு முழுவதும் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து சமூக ஆர்வலர்களும், அரசியல் அவதானிகளும் மற்றும் சுகாதார தரப்பினரும், 99 சதவீதமான பெற்றோரும் தமது கடுமையான விசனத்தையும், கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

நாடு, கொரோனா, டெல்டா போன்ற மிகக்கொடிய வைரஸ்களின் உச்சக்கட்ட அச்சுறுத்தலிலிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களையும் எதிர்கால சந்ததியினரான மாணவர்களையும் வழிநடத்தி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த பதவி நிலையில் இருக்கும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இவ்வாறானதொரு மட்டமான செயலைச் செய்து வருவதை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே தமது குறிக்கோளாகக் கொண்டுள்ள எதிர்க்கட்சியினர், இந்த ஆசிரியர்களை தமது தேவைக்கு பகடைக்காய்களாக பாவித்து வருகின்ற கபடத் தனத்தை புரிந்தும் புரியாதது போல ஆசிரியர்கள் நடந்து கொள்வது அவர்கள் கற்ற மற்றும் கற்பிக்கும் கல்வி முறைக்கு உகந்ததல்ல எனவும் சம்பந்தப்பட்ட தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனவே ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நாடு இக்கட்டான ஒரு சூழலை எதிர்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கல்வியறிவில்லாதவர்கள் கூட பொறுப்பற்ற இத்தகைய செயலில் ஈடுபட மாட்டார்கள். 

வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக கொடிய வைரஸ் நோயினால் மக்கள் தினமும் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் மரணிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற ஒரு சூழலில், பலரையும் ஒன்றுதிரட்டி சுகாதார வழி முறைகள் எதனையும் பின்பற்றாது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதென்பது அவர்களது அறிவீனத்தை காட்டி நிற்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்துடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் கொண்டுள்ள உறவு அவர்கள்தான் இந்தப் போராட்டத்தின் பின்னணியிலுள்ளனர் என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது.

உண்மையில் அதிபர், ஆசிரியர்களுக்கு கடந்த அரசாங்கம் உட்பட அதற்கு முன்னே இன்றைய ஆட்சியிலிருக்கும் அரசாங்கமும் சம்பள அதிகரிப்புகளை வழங்கியுள்ளது. அவ்வாறே சம்பளம் போதாது என்று இருந்தாலும் அதனை கேட்டு போராட்டம் நடத்தும் நேரம் இதுவல்ல என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே அதிபர் ஆசிரியர்கள் நமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படும் வகையில் பண்புடனும, ஒழுக்கத்துடனும் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

வெறுமனே தொழிலாளர்கள் போன்று வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதும், பொலிஸாருடன் மோதல் நடத்துவதும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் வினயமாக கேட்டுள்ளனர். 

குறிப்பாக அரசாங்கம் மிகவும் பொறுமையுடன் இந்த விடயத்தை கையாண்டு வருகின்றது. இதுவே நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்றிருந்தால் அதிபர் ஆசிரியர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கும். 

ஆனால் இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் கல்வி அமைச்சர் ஆகியோர் இது தொடர்பாக மிகவும் பொறுமையுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு பெற்று தருவதாக உறுதிமொழிகளை வழங்கிய போதும் அதிபர் ஆசிரியர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment