அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் விசேட தீர்மானம் நாளை திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படுமென அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் வரவேற்கத்தக்க முடிவை எடுக்காவிடின் உறுதியாக எமது போராட்டத்தை முன்கொண்டு செல்வோமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தி அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டங்களை முன்னெடுத்துவருவது குறித்தும் அரசாங்கம் இந்த விடயத்தில் எடுத்துள்ள முடிவுகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
“நாட்டில் கொவிட்19 தொற்று ஏற்பட ஆசிரியர்கள்தான் காரணம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சமூக இடைநிலை, முகக்கவசம் அணிதல், செனிடைசர் பாவித்தல் உட்பட அனைத்து சுகாதார வழிகாட்டல்களும் முறையாக பின்பற்றப்பட்டே ஆசிரியர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே, இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறோம்.
எமது போராட்டத்திற்கு தீர்வை வழங்கும் வரை உறுதியாக பலவடிவங்களில் போராட்டம் தொடரும். தற்போதைய சூழலில் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளோம். பரீட்சை வினாத்தாள் திருத்தல் பணியையும் நிறுத்தியுள்ளோம்.
அதேபோன்று கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுநிரூபத்தின் பிரகாரம் ஆசிரயர்கள் அனைவரும் கடமைக்கு திரும்புமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், போராட்டத்தை முன்கொண்டு செல்வதால் அதனையும் நிராகரித்துள்ளோம்.
நாளை திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பதாக அரசாங்கம் எமக்கு உறுதியளித்துள்ளது. அதன் பிரகாரம் வரவேற்கத்தக்க முடிவை அரசாங்கம் எடுக்காவிடின் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் எமது போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment