(எம்.மனோசித்ரா)
சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பெருமளவான தொற்றாளர்களே ஒட்சிசன் தேவையுடையோராகக் காணப்படுகின்றனர்.
தாம் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அறிந்திருக்காமை அல்லது சாதாரண அறிகுறிகள் தென்படும் போது அவற்றை உதாசீனப்படுத்தல் என்பவையே இதற்கான பிரதான காரணியாகும்.
எனவே சிறிதளவில் அறிகுறிகளை உடையவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால் பனாப்பிட்டி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களில் 40 சதவீதமானோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாக உள்ளனர்.
இடைநிலை சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவோர் இந்த சிக்கலுக்கு முகங்கொடுக்கவில்லை.
சமூகத்திலிருந்து நேரடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களே இவ்வாறு ஒட்சிசன் தேவையுடையவர்களாகவுள்ளனர்.
இவ்வாறான தொற்றாளர்கள் சாதாரணமாக அறிகுறிகள் தென்படும் போது அதனை கவனத்தில் கொள்ளாமல் அன்றாட வேலைகளில் ஈடுபடுகின்றனர். சிலர் தாம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோம் என்பதை அறியாத நிலையிலும் இவ்வாறான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறானவர்கள் உடலில் ஒட்சிசன் அளவு முற்றாக குறைவடையும் நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன் காரணமாகவே தீவிர நிலைமையை அடையும் வீதமும் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்பட்டால் கூட உடனடியாக மருத்துவர் ஒருவரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment