கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நுழைந்த நிலையில், அந்நாட்டில் இருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி அஷ்ரஃப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"ஜனாதிபதி அஷ்ரஃப் கனியையும் அவரது குடும்பத்தினரையும் மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றது என்பதை ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சகம் உறுதி செய்ய முடியும்," என்று அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில், தப்பிச் செல்லும்போது அஷ்ரஃப் கனி தம்முடன் 169 மில்லியன் டாலர் பணத்தையும் கொண்டு சென்றதாக தஜிகிஸ்தான் நாட்டுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மொகம்மத் ஜஹீர் அக்பர் தெரிவித்தார்.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அஷ்ரஃப் கனி தப்பிச் சென்றது தாய்நாட்டுக்கு செய்த துரோகம் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் பதவி நீக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சாலேவை தற்காலிக ஜனாதிபதியாக தமது தூதரகம் அங்கீகரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு பிபிசிக்கு அனுப்பிய ஆடியோ செய்தி ஒன்றில் நாட்டில் போர் இன்னும் முடியவில்லை என்றும், தாமே சட்டப்படியான காபந்து ஜனாதிபதி என்றும் சாலே தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment