தம்மை விமர்சிப்பவர்களின் குரலை முடக்குவதே அரசாங்கத்தின் முக்கிய தேவையாகவுள்ளது : ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பலத்துடன் எழுமாறு அழைப்பு விடுக்கின்றோம் - தேசிய மக்கள் சக்தி - News View

Breaking

Friday, August 27, 2021

தம்மை விமர்சிப்பவர்களின் குரலை முடக்குவதே அரசாங்கத்தின் முக்கிய தேவையாகவுள்ளது : ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பலத்துடன் எழுமாறு அழைப்பு விடுக்கின்றோம் - தேசிய மக்கள் சக்தி

(எம்.மனோசித்ரா)

நாட்டை ஆட்சி செய்வது தொடர்பில் எவ்வித தெளிவின்மையும் அற்ற, தம்மீதும் நம்பிக்கை அற்ற தலைவர்களால் கோழைத்தனமான செயற்பாடுகள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. தமது உயிரைப் பற்றியும், தமது அன்புக்குரியவர்களின் உயிரைப் பற்றியும் அச்சத்திலுள்ள நாட்டு மக்கள் கொவிட் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், தம்மை விமர்சிப்பவர்களின் குரலை முடக்குவதே அரசாங்கத்தின் முக்கிய தேவையாகவுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இவ்வாறு பொலிஸாரை அரசியல் செயற்பாடுகளுக்காக உபயோகிக்கின்றமையால் நீதிமன்றத்தின் முன்னிலையில் எதிர்காலத்தில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்கத்தின் குறுகிய நோக்கங்களுக்காக செயற்படுகின்ற பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் முன்வராது என்பதற்காக உதாரணங்கள் பல உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் , சிறிதளவு விமர்சனத்தையோ அல்லது கருத்து வேறுபாடுகளையோ தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவில்லை. மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்குமே பயன்படுத்துகின்றமையை அவதானிக்க முடிகிறது.

இதுவரை காலமும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவ்வாறில்லை எனில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இந்த அரசாங்கம் தொழிற்சங்க தலைவர்களுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. சில தலைவர்கள் மற்றும் செயற்பாட்டார்கள் கூட தற்போதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தள விமர்சகர்கள் மற்றும் ஏனைய ஊடகவியலாளர் மாத்திரமின்றி கொவிட் தொற்று பரவல் குறித்த அனுபவம் தொடர்பில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கத்தினர் கூட பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட ஷெஹான் மாலக கமேகே என்ற சிவில் சமூக செயற்பாட்டாளரும் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையை இந்த அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். பொலிஸாரால் நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் நீதிபதிகள் பொலிஸாருக்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளமைக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் மதிப்பளிக்கின்றோம்.

அரசாங்கம் இவ்வாறு பொலிஸாரை அரசியல் செயற்பாடுகளுக்காக உபயோகிக்கின்றமையால் நீதிமன்றத்தின் முன்னிலையில் எதிர்காலத்தில் பொலிஸார் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அரசாங்கத்தின் குறுகிய நோக்கங்களுக்காக செயற்படுகின்ற பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு எந்தவொரு அரசாங்கமும் முன்வராது என்பதற்காக உதாரணங்கள் பல உள்ளன.

மக்களை அச்சுறுத்துதல், தாம் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் , அதாவது நாட்டை ஆட்சி செய்வது தொடர்பில் எவ்வித தெளிவின்மையும் அற்ற, தம்மீதும் நம்பிக்கை அற்ற தலைவர்களால் கோழைத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமது உயிரைப் பற்றியும், தமது அன்புக்குரியவர்களின் உயிரைப் பற்றியும் அச்சத்திலுள்ள நாட்டு மக்கள் கொவிட் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், தம்மை விமர்சிப்பவர்களின் குரலை முடக்குவதே அரசாங்கம் முக்கிய தேவையாகவுள்ளது.

இந்நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற எந்தவொரு பிரச்சினைக்கும், நியாயமாக கோரிக்கைகளுக்கு தீர்வினை வழங்காத அரசாங்கம், அதனை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துவதை மாத்திரமே செய்து வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தேவையான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

கொவிட் தொற்றினை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்தல், மக்களின் சுகாதார மற்றும் நலனுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். அச்சுறுத்த முயற்சிக்கின்றமை மற்றும் அரசியல் தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்துகின்றமை என்வற்றை கடுமையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பலத்துடன் எழுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் மக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்காக தொடர்ந்தும் முன்னிற்போம். அத்தோடு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்.

No comments:

Post a Comment