மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் காணி அமைச்சருக்கு அவசர கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் காணி அமைச்சருக்கு அவசர கடிதம்

இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (27.08.2021) காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன விற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டல குளம் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி 250 ஏக்கர் உள்ளது.

இக்காணி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு முறையாக காணி கச்சேரியும் நடைபெற்றுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்புடன் பல கலந்துரையாடல்களும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஆகவே பிரதேச செயலாளரினால் பலமுறை எழுத்து மூலம் பெயர்ப்பட்டியல் இரண்டு ஏக்கர் வீதம் வழங்குமாறு காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணக்கமும் காணப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால் இதுவரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான பதிலும் வழங்கவில்லை.

மாறாக தற்போது அரசியல் செல்வாக்குடன் வெளி மாவட்டங்களை சேர்ந்த தனி நபர்களுக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழு நூறு ஏக்கருக்கு மேல் வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தற்போது காணி துப்புரவாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவ் அனுமதி கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டதாக அறிகிறோம். எனவே தனி நபர்களின் காணி துப்புரவாக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஏலவே பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக இரண்டு ஏக்கர் வீதம் காணி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குங்கள்.

ஏழை விவசாயிகளை பல ஆண்டுகளாக ஏமாற்றுவது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மிக மோசமான செயற்பாடு ஆகும். ஆகவே தயவு செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கிறோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment