“இலங்கையர் காணாமல் போயிருக்கின்றார் என்றே கருத வேண்டும்” - ஜனாதிபதி எனக்கு அடிக்கடி கூறுவார் என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

“இலங்கையர் காணாமல் போயிருக்கின்றார் என்றே கருத வேண்டும்” - ஜனாதிபதி எனக்கு அடிக்கடி கூறுவார் என்கிறார் நீதி அமைச்சர் அலி சப்ரி

(நா.தனுஜா)

ஒருவர் காணாமல் போயிருந்தால், அவர் ஏன் காணாமல் போனார் ? அவர் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்? ஆகியவை தொடர்பில் ஆராய்வதையும் குற்றவுணர்ச்சியையும் விட்டுவிட வேண்டும். மாறாக ஓர் இலங்கையர் காணாமல் போயிருக்கின்றார் என்றே கருத வேண்டும். அப்போதுதான் அவரது குடும்பத்தினரின் வலியைப் புரிந்து கொள்ள முடியும் என்று ஜனாதிபதி அடிக்கடி கூறுவார். அதற்கமைய நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாமல் இருக்கின்ற காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உரிய தீர்வைக் கண்டடைவதில் நாம் பெரிதும் அக்கறை கொண்டிருக்கின்றோம் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை நினைவு கூருவது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அதனூடாகவே தற்போது பிரச்சினையொன்று காணப்படுகின்றது என்பதும் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயமும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

காணாமல் போனோருடன் தொடர்புடைய ஒரு தினத்தை நினைவு கூருவது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும் கூட, நாம் கடந்த காலத்தில் எங்கே தவறிழைத்தோம் என்பதைப் புரிந்து கொண்டு முன் நோக்கிப் பயணிப்பதற்கு அது மிகவும் அவசியமாகும்.

பாதிக்கப்பட்டுள்ள, ஒடுக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடைவதற்கு புதிய நுட்பங்களைக் கையாளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எனக்கும் இக்கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பான ஏனைய அமைச்சர்களுக்கும் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்திருக்கின்றார். அதனூடாகவே அனைத்துப் பிரஜைகளும் இது தமது நாடு என்றும் தாமனைவரும் சமத்துவமாகவே நடத்தப்படுகின்றோம் என்றும் உணர்வார்கள்.

ஜனாதிபதி மீண்டும் மீண்டும் என்னிடம் ஒன்றை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். குற்றவுணர்ச்சி தொடர்பில் மறந்து விடுங்கள். ஒருவர் காணாமல் போயிருந்தால், அவர் ஏன் காணாமல் போனார்? அவர் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்? ஆகியவை தொடர்பில் ஆராய்வதை விட்டுவிட வேண்டும். மாறாக ஓர் இலங்கையர் காணாமல் போயிருக்கின்றார் என்று கருத வேண்டும் என்று ஜனாதிபதி கூறுவார்.

எனவே நாம் மிகக்குறுகிய காலத்திற்குள் பயனுள்ள, செயற்திறன் மிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். பல காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாம் முனைப்புடன் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி திங்கட்கிழமையன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் இணையவழிக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment