நா.தனுஜா
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட திங்கட்கிழமை புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மிலிந்த மொரகொட, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் நற்சான்றுப்பத்திரத்தையும் கையளித்தார்.
உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்கும் இந்நிகழ்வின் போது பதில் உயர்ஸ்தானிகர் நிலுக கதுருகமுவ உள்ளிட்ட இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் வரவேற்பையும் மத வழிபாடுகளையும் தொடர்ந்து மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராகக் கடமைகளைப் பொறுப்பேற்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
2021 - 2023 ஆம் ஆண்டு வரையான மிலிந்த மொரகொடவின் பதவிக் காலத்தின் போது முன்னெடுக்கப்படவுள்ள இந்திய - இலங்கை தூதுக்குழு தொடர்பான ஒன்றிணைந்த தேசிய மூலோபாயமும் இதன்போது பகிரங்கப்படுத்தப்பட்டது.
அந்த தேசிய மூலோபாயத்தில் இந்திய - இலங்கை தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தூரநோக்கு அடிப்படையிலான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
மேற்படி தேசிய மூலோபாயத்தில் தூதுக்குழுவின் உபாயங்களும் அதன் அடிப்படைகள் மற்றும் நோக்கங்களும் ஒரு பிரிவாகவும் ஒவ்வொரு நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கான செயன்முறைகளின் அமுலாக்கம் மற்றொரு பிரிவாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி தூதுக்குழுவின் 7 அடிப்படைகளும் அதன்கீ ழான 30 நோக்கங்களும் தேசிய மூலோபாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தி, இரு தரப்பு நல்லுறவை ஓர் கட்டமைப்பு ரீதியான மட்டத்திற்குக் கொண்டு வருதல், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல், நாட்டிற்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களும் அதில் அடங்கியுள்ளன.
மேலும் இரு நாடுகளுக்கும் பொதுவான இந்து சமுத்திரப் பாதுகாப்பு, இலங்கையின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்தும் தேசிய மூலோபாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தூதுக்குழுவின் பிரதிநிதிகளுக்குத் தனது பாராட்டை வெளியிட்டார்.
No comments:
Post a Comment