மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணம் அதிகரிப்பதால் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் : தேவையின்றி நடமாடினால் ஆன்டிஜன், பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் - வைத்தியர் கே.சுதாகர் - News View

Breaking

Saturday, August 28, 2021

மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணம் அதிகரிப்பதால் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் : தேவையின்றி நடமாடினால் ஆன்டிஜன், பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் - வைத்தியர் கே.சுதாகர்

மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 3 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள் குடும்பங்களையும் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் இவ் ஆண்டு 1,560 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் 536 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் இடம் பெற்றுள்ளது. மன்னாரை சேர்ந்த ஆண் ஒருவரும்,பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன்,வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை 2 மரணம் நிகழ்ந்துள்ளதோடு, நேற்றையதினம் 3 கொரோனா மரணம் மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இதுவரை மன்னார் மாவட்டத்தில் 18 கொரோனா மரணம் சம்பவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் கொரோனா மரண சம்பவம் அதிகரித்து செல்வதால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் தற்போதுவரை 61 ஆயிரம் பேர் வரை முதலாவது தடுப்பூசியையும், 52 ஆயிரம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று சுகாதார குழுவினர் தடுப்பூசியை வழங்கி வருகின்றனர்.

தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு, தேவையின்றி நடமாடுபவர்களுக்கு ஆன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர். பரிசோதனைகள் திடீரென மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad