கொவிட் தொற்று பரவல் இன்னமும் எமது கட்டுப்பாட்டை இழக்கவில்லை, பொறுத்தமான தீர்மானத்தை விரைவாக எடுக்க வேண்டுமென்கிறார் ஹேமந்த ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Friday, August 13, 2021

கொவிட் தொற்று பரவல் இன்னமும் எமது கட்டுப்பாட்டை இழக்கவில்லை, பொறுத்தமான தீர்மானத்தை விரைவாக எடுக்க வேண்டுமென்கிறார் ஹேமந்த ஹேரத்

கொவிட் தொற்று பரவல் இன்னமும் எமது கட்டுப்பாட்டை இழக்கவில்லை. ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளதால் அனைத்து தரப்பினரும் இணைந்து மிகவும் பொறுத்தமான தீர்மானத்தை விரைவாக எடுக்க வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களிலும் வெவ்வேறு நோய்களுக்கு உள்ளானவர்கள்தான் உயிரிழந்துள்ளனர். 

அதனால்தான் அபாயமான குழுக்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களை உடனடியாக தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறு கூறுகிறோம். தடுப்பூகளை செலுத்திக் கொள்வதன் மூலம் மரணங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயல்பாடும் இன்னமும் எமது கையில்தான் உள்ளது. கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றிருந்தால் இதனையும் விடவும் வேகமாக தொற்று பரவியிருக்கும். 

ஒரு நபர் இரண்டு பேருக்கு தொற்றை பரப்பினால் ஐந்து நாட்களின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். ஆனால், கண்டறியப்படாத தொற்றாளர்களையும் சேர்த்துப் பார்த்தால் தொற்றாளர்கள் இரட்டிப்பாகவில்லை.

தொற்றானது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்தான் குறைந்தளவானவர்கள் தொற்றுக்கு உள்ளாகுகின்றனர். இல்லாவிட்டால் இரண்டு, மூன்று மடங்காக தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். 

என்றாலும் தற்போதைய நிலைமையானது மிகவும் அபாயகரமானது. இதுவொரு சுகாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல. சமூக, பொருளாதார பிரச்சினையும் ஆகும். இவற்றை விடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது. ஆகவே, அனைத்து தரப்பினரும் இணைந்து மிகவும் பொறுத்தமான மாற்றுத் தீர்மானத்தை விரைவாக எடுக்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment