பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், இல்லையேல் ஜனவரியில் மரணம் 30 ஆயிரத்தை கடக்கும் - இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை மூலம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, August 13, 2021

பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், இல்லையேல் ஜனவரியில் மரணம் 30 ஆயிரத்தை கடக்கும் - இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை மூலம் எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் தொற்றுப் பரவல் குறித்து ஆராயும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 5 ஆவது சுயாதீன வைத்திய நிபுணர்கள் குழு கூட்டம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம் பெற்றுள்ளது.

அதில், இலங்கையில் தற்போதைய கொவிட் இறப்பு மற்றும் கொவிட் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் கொவிட் தொற்றால் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலக சிறப்பு மருத்துவர்களின் அறிக்கை நேற்றுமுன்தினம் (12 ஆம் திகதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், இதனால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 12,000 வரை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது காணப்படும் பயணக் கட்டுப்பாடுகளுடன் செப்டெம்பர் மாதத்திற்குள் நாளாந்தம் 6,000 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படலாம். ஒக்டோபர் மாதத்திற்குள் 226 பேர் நாளாந்தம் கொவிட் தொற்றால் மரணிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் குழு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள அறிக்கையின்படி, ஒக்டோபர் முதல் வாரத்திற்குள் நாளாந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 275 ஆக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே - ஜூன் மாதங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் நாள்தோறும் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 1,000 பேர் வரை குறைத்துக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கிறது.

இதற்கமைய, கொவிட் தொற்றின் மோசமான நிலையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

அவை,

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல்

மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்

குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல்

அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல்

பொதுக் கூட்டங்களைத் தடுத்தல்

சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல்

பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள்

நோய்த் தொற்றுகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடல்

போன்ற முக்கிய அம்சங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

நிபுணர்கள் வைத்தியர் பாலித அபேகோன், நிஹால் அபேசிங்க, ராஜீவ் டி சில்வா, லக்குமாரா பெர்னாண்டோ, பத்மா குணரத்ன மற்றும் ஆனந்த விஜேவிக்ரமா ஆகியோர் அடங்குவர்.

No comments:

Post a Comment