இலங்கையில் கொரோனாவின் டெல்டா திரிபடைந்த தொற்று அடுத்து வரும் 3 வாரங்களில் மோசமடையலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டா திரிபுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை போராட்டம், நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் தொற்றாளர்கள் நிறைந்து வழியும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதாக வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது வெறும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் மூன்று வாரங்களில் நிலைமை மோசமடையக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ள வைத்தியர்கள், ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வைத்திசாலைகளுக்கு செல்ல அஞ்சுவதால் மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
தற்போது ஒக்சிசன் தேவைப்படும் சகல நோயாளர்களுக்கும் அதனை வழங்குவதற்கான செயற்பாடுகள் சமாளிக்கப்படுகின்ற போதிலும் ஒக்சிசனுக்கு தட்டுப்பாடு ஏற்படுமேயானால் இறப்புகளைத் தவிர்க்க முடியாமல் போகலாம் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் போதுமான கட்டில்கள் இல்லாததால் அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் 200 மரணங்கள் சம்பவிக்கக் கூடும் எனவும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 5,000 ஐ எட்டக்கூடும் எனவும் வைத்தியர்கள் கணிப்பிடுகின்றனர்.
தற்போது வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஒரே கட்டிலை 2 முதல் 3 நோயாளிகள் வரை பகிர்வதால் அடுத்து வரும் நாட்களிலும் வாரங்களிலும் இலங்கையில் நிலைமை மோசமடையக்கூடும். இதனை விட ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாய்களிலும் வைத்திசாலை தாழ்வாரங்களிலும் படுக்க நேரிட்டுள்ளது.
இரண்டு நோயாளர்கள் பகிரும் படுக்கைகளில் பல நோயாளர்கள் தங்களது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருப்பதாக வைத்தியர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபுறம் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நோயாளர்கள் தமது வாழ்க்கையில் மிக மோசமானவற்றை காண்பதால் கடுமையான மன அழுத்தங்களுக்கும் உள்ளாவதை அவதானிக்க முடிவதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது இவ்வாறிருக்க, உடனடியாக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் டெல்டா திரிபு அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் உச்சக்கட்டத்தை அடைந்து அழிவை ஏற்படுத்தும் என இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிலைமை நீடித்தால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சுகாதார சேவை சரிந்து விழக்கூடும் என மற்றும் சில வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் இதற்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா தொற்று அலைகளுக்கு எதிராக களநிலைகளிலேயே போராட வேண்டியிருந்தது. ஆனால். தற்போதைய போராட்டம் வைத்திசாலைகளுக்கு நகர்ந்து பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என பேராசிரியர் அகம்போதி கூறினார்.
கொரோனா தொற்றுக்கு மிகச் சரியான சிகிச்சை இல்லாத நிலையில் நோயாளிகளுக்கு பரிகாரம் கிடைக்கக் கூடிய ஆதரவான சிகிச்சைகளை வழங்க வைத்தியர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சுகாதார சேவைகளில் பணியாற்றுபவர்கள் மத்தியிலும் கொரோனா தொற்று பரவுவதால் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் கடந்த வாரம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கை வைத்தியத்துறையில் இது அபூர்வமான நிகழ்வாகும்.
தொற்று நோயாளர்களினது எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் நிலையில் டெல்டா திரிபு பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்கும் காத்திரமான கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வீரகேசரி
No comments:
Post a Comment