ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு கேந்திர மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த குண்டூஸ் நகரை அவர்கள் கைப்பற்றினர்.

இந்நகரம் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சார்-ஈ-புல் மற்றும் தலோகான் ஆகிய நகரங்களும் தாலிபன்கள் வசமாகியுள்ளது. 

இந்த மூன்று நகரங்களுடன் சேர்த்து வெள்ளிக்கிழமை முதல் ஐந்து மாகாணத் தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு ஆப்கானித்தானில் உள்ள ஜாஸ்ஜான் மாகாணத்தின் தலைநகர் ஷெபெர்கானை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தாலிபன்கள் அறிவித்தனர். வெள்ளியன்று நிம்ரோஸ் மாகாண தலைநகரான சராஞ் நகரைக் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

அதற்கு முன்பு அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

No comments:

Post a Comment