நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரின் பங்களிப்பு குறித்து முழு நாடும் பாராட்டுத் தெரிவிக்கும் போது ஒரு தனி நபர் மட்டும் அதனை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை்கு இன்று (09) விஜயம் செய்த அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தடுப்பூசி செயல்முறையில் இராணுவத்தின் பங்களிப்பு தொடா்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விமர்சித்திருந்தார். எனவே இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் அதற்கு பதிலளிப்பது எனது கடமையாகும். மேற்படி செயன்முறை தவறு என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட போதும் அவரும் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையிலே தடுப்பூசியைப் பெற்றுள்ளார்.
நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பாரிய போராட்டத்தில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது தவறு என்று ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறுவது நியாயமானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.
கொவிட் ஒழிப்பு செயலணியில், கொவிட் தடுப்புப் பணிக்குழுவின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், சுகாதாரத்துறை தொடர்பான இரண்டு அமைச்சர்களும் இன்னும் சில அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம் போன்ற பலர் உள்ளனர். இராணுவத் தளபதி ஆயுதப் படைகளின் பிரதானிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் பல நிபுணர்கள், உட்பட கொவிட் தடுப்பு தொடர்பான முடிவுகள் கொவிட் பணிக்குழுவினால் கூட்டாக எடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது செயல்பாட்டு நிலைய அங்கத்தவர்கள் ஒரு சிலர் மட்டும் எந்த முடிவையும் தனியாக எடுப்பதில்லை. கொவிட் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலைகள் வந்தபோது, சிலர் அதை கட்டுப்படுத்த முடியாமற் போகும் என்று சொன்னார்கள், ஆனால் சுகாதார துறையின் உதவியுடன் அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது. மக்களின் ஆதரவுடன், கொவிட் தொற்று நோய் நாட்டிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கப்படும்.
கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டிலேயே தங்கி சிகிச்சையளிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்புப் பேரணியின் நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாடிய பின்னரே, தொற்றாளர்கள் வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்டது. பின்னர் அது ஒரு மாதிரித் திட்டமாக களுத்துறை மாவட்டம், அதன் பின்னர் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அறிகுறிகள் அல்லது சிக்கல்கள் இல்லாதவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்காது வீடுகளில் வைத்திருப்பதால் வைத்தியசாலைகளில் ஏற்படும் தேவையற்ற நெரிசலைத் தடுக்க முடியும் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையில், டெல்டா திரிபு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகளாலும் இதனை கட்டுப்படுத்துவது கடினமாகவுள்ளதால் இது குறித்து அரசாங்கம் அதி கூடிய கவனத்தை செலுத்த வேண்டுமென்பதுடன் விசேட அமைச்சரவைக் குழுவொன்றை அமைத்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இராணுவத் தளபதியின் செலணியை நம்பிக்கொண்டிருந்தால் உயிரிழப்புகள்தான் அதிகமாகுமென தெரிவித்திருந்தார்.
(எம்.ஏ.அமீனுல்லா, அக்குறணை நிருபர்)
No comments:
Post a Comment