ஹரின் MP செப்டம்பர் வரை கைது செய்யப்படமாட்டார் - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

ஹரின் MP செப்டம்பர் வரை கைது செய்யப்படமாட்டார் - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் சட்டமா அதிபர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உயர் நீதிமன்றத்தில் நேற்று (14) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி ஹரின் பெர்னாண்டோவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு நேற்று பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்கு மூலம் பதிவு செய்து, தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது மன்றுக்கு அறிவித்தார். 

இந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment