சஜித் பிரேமதாஸ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை - எஸ்.எம்.மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 15, 2021

சஜித் பிரேமதாஸ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை - எஸ்.எம்.மரிக்கார்

(நா.தனுஜா)

அண்மையில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான பாராளுமன்ற கோப் குழுக்கூட்டம் தொடர்பில் அக்குழுவின் உறுப்பினர்களான தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அக்கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அவை அவர் மீது சேறு பூசுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான பாராளுமன்ற கோப் குழுக் கூட்டம் நடைபெற்றது. எனினும் கோப் குழுவின் உறுப்பினர்களான எமக்கு அது குறித்து அறிவிக்கப்படவில்லை.

எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது குற்றஞ்சாட்டும் வகையிலான விடயங்கள் கோப் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் ஊடாகவே கோப் குழுக் கூட்டம் நடைபெற்றமையை அறிந்து கொண்டோம்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள காணியொன்று சஜித் பிரேமதாஸவின் காலத்தில் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டதாக இக்கூட்டத்தின்போது கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யான விடயமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மீது சேறு பூசுவதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஃபேரியல் அஷ்ரப் வீடமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட நிலப்பரப்பில் இந்திய நிறுவனமொன்றுடன் கூட்டிணைந்து வீடமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே சஜித் பிரேமதாஸ மீது சேறு பூசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து அவரையோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியையோ வீழ்த்திவிட முடியும் என்று எவரேனும் கருதினால், அது முற்றிலும் தவறான கணிப்பாகும்.

ஒவ்வொரு துறைசார் அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பக்கச்சார்பின்றி ஆராய்ந்து, அது குறித்த இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே கோப் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அதேவேளை ஃபேரியல் அஷ்ரபின் காலத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்ட திட்டமொன்றுக்கு நிதியளித்த பின்னரும், அச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படாமையினால் அந்த நிதியை மீளப் பெறுவதற்குரிய நடவடிக்கைகள் மாத்திரமே சஜித் பிரேமதாஸவினால் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment